நாதப்பறை அறைதலாவது, பிரணவம் முதலிய மந்திரங்களைக் கணித்தல். மதிவெண் குடை கவித்தலாவது, அம்மந்திரங்களின் பொருளில் அழுந்துதல். இதனால், அடியாராகிய வீரருக்கு உரிய கருவிகள் கூறப்பட்டன. 1 தொண்டர்காள் தூசிசெல்லீர் பத்தர்காள் சூழப்போகீர் ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள் திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள் அண்டர்நா டாள்வோம்நாம் அல்லற்படை வாராமே. பதப்பொருள் : தொண்டர்காள் - தொண்டர்களே, தூசி செல்லீர் - முன்னணிப் படையாய்ச் செல்லுங்கள்; பத்தர்காள் - அன்பர்களே, சூழப்போகீர் - பக்கங்களிலே சூழ்ந்து செல்லுங்கள்; ஒண்திறல் - ஒளி மிகுந்த வலிமையான, யோகிகளே - யோகியர்களே, பேரணி உந்தீர்கள் - நடுப்படையைச் செலுத்துங்கள்; திண் திறல் சித்தர்களே - சரீர திடமுடைய சித்தர்களே, கடைக்கூழை செல்மின்கள் - பின்னணியாகச் செல்லுங்கள்: இங்ஙனம் சென்றால், அல்லல் படை வாராமே - துன்பமாகிய படைகள் வந்து நலியாவண்ணம், நாம் அண்டர்நாடு ஆள்வோம் - நாம் தேவர் நாட்டை ஆள்வோம். விளக்கம் : சரியை கிரியை யோகம் ஞானமாகிய நான்கு நெறிகளிலே நிற்பவர்களை அழைத்து அமரர் நாடு ஆள்வதற்கு அணிவகுத்துச் செல்லும் முறையினைக் கூறினார். 'அண்டர்' என்றது பதமுத்தியடைந்தவர்களை. எனவே, அவர்களது நாடு சிவலோகமேயாதல் அறிக. துன்பம் வந்து நலியாமல் இருப்பதற்குரிய வழி காட்டியபடி. இதனால், அடியாராகிய படைகள் அணி வகுத்துச் செல்லும் முறை கூறப்பட்டது. 2 திருச்சிற்றம்பலம்
|