47. திருவெண்பா அழகிய வெண்பாக்களால் ஆகிய பதிகம். (திருப்பெருந்துறையில் அருளியது) அணைந்தோர் தன்மை சிவத்தை அணைந்தவர்களது தன்மை. அஃதாவது, சீவன் முத்தர்களது இயல்பு. நேரிசை வெண்பா திருச்சிற்றம்பலம் வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன் - செய்ய திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ மருவா திருந்தேன் மனத்து. பதப்பொருள் : செய்ய - செம்மையான, திரு ஆர் பெருந்துறையான் - அழகு பொருந்திய திருப்பெருந்துறையுடையவனாகிய, தேன் உந்து செந்தீ - தேனைப் பொழிகின்ற செஞ்சோதியை, மனத்து மருவாது இருந்தேன் - மனத்து மருவாது இருந்தேன் - மனத்துப் பொருந்தாது இருந்தேன்; அதனால், வெய்ய - கொடிய, வினை இரண்டும் - இரு வினைகளும், வெந்து அகல - வெந்து ஒழிய, மெய் உருகி - உடம்பு உருகி, பொய்யும் பொடியாகாது - இப்பொய் வாழ்க்கையும் நீறாய்ப் போகாது உள்ளது; என் செய்கேன் - இனி நான் என்ன செய்வேன்! விளக்கம் : இறைவன், தன்னை எண்ணுவார்க்கு இன்பம் தருபவனாதலின், 'தேனுந்து செந்தீ' என்றார். பிற தீயினின்றும் பிரித்துக் காட்டுவார், 'தேனுந்து' என்ற அடை கொடுத்தார். 'இறைவனாகிய தீயைப் பொருந்தாமையால் வினையாகிய காட்டை அழித்துச் சாம்பராக்க முடியாது இருக்கிறேன்' என்று வருந்துகிறார். இறைவனை அன்பினால் நினைந்தால் உடல் வாழ்க்கை ஒழியும் என்ற குறிப்பும் உள்ளது. இதனால், இறைவனை அன்பினால் மனத்தில் நினைக்க வேண்டும் என்பது கூறப்பட்டது. 1 ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ பார்க்கோ பரம்பரனே என்செய்கேன் - தீர்ப்பரிய ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான் தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து. பதப்பொருள் : பரம்பரனே - மிகவும் மேலானவனே, தீர்ப்பு அரிய - நீக்குவதற்கு அருமையான, ஆனந்த மால் ஏற்றும் -
|