49, திருப்படையாட்சி (தில்லையில் அருளியது) இப்பதிகத்தின் முதல் திருப்பாடலில், 'பாண்டிநன்னாடுடையான் படையாட்சிகள் பாடுதும்' என்று அருளியிருப்பதால், இது, 'திருப்படையாட்சி' எனப் பெயர் பெற்றது. இதில் சில பகுதிகள் அகப்பொருள் வகையாகவும் கூறப்படுகின்றன. சீவ உபாதி ஒழிதல் உயிரினது மாசு நீங்குதல் திருச்சிற்றம்பலம் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே. பதப்பொருள் : மீன் வலை வீசிய - மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய, கானவன் - வேடனாகிய இறைவன், வந்து வெளிப்படுமாயிடில் - எழுந்தருளித் தோன்றுவானாயின், கண்கள்இரண்டும் - இரண்டு கண்களும், அவன் கழல்கண்டு - அவன் திருவடியைக்கண்டு, களிப்பன் ஆகாதே - களிப்பன ஆகாது போகுமோ? என் வாழ்வு - எனது வாழ்க்கை, காரிகையார்கள்தம் வாழ்வில் - மகளிரொடு கூடி வாழ்வதில், கடைப்படும் ஆகாதே - முடிவு பெற்றுவிடுதல் ஆகாது போகுமோ? மண்களில் வந்து பிறந்திடுமாறு - மண்ணுலகத்தில்வந்து பிறந்திடும் விதத்தை, மறந்திடும் ஆகாதே - மறத்தல் ஆகாது போகுமோ? மால்் அறியா - திருமால் அறியாத, மலர்ப்பாதம் இரண்டும் - தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும், வணங்குதும் ஆகாதே - வழிபடுவதும் ஆகாது போகுமோ? பண் களிகூர் தரு - இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற, பாடலொடு - பாட்டுடன், ஆடல் - ஆட்டம், பயின்றிடும் ஆகாதே - பழகுதல் ஆகாது போகுமோ? பாண்டி நல்நாடு உடையான் - நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன், படையாட்சிகள் - தனது படையாகிய அடியார்களை
|