அடியார்' என்றார். இதனையே, 'பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம்' என்றது திருவுந்தியார். பெருந்துறைப் பெருமானிடம் தமக்குள்ள பற்றைக் கூறுவார், 'பெருந்துறையில் என்றும் பிரியானை வாயாரப் பேசு' என்றார். இதனால், அடியார்களுக்கு இவ்வுலகிலும் பேரின்பக் காட்சியே உண்டாகும் என்பது கூறப்பட்டது. 6 பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசில் மணியின் மணிவார்த்தை - பேசிப் பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல மருந்தினடி என்மனத்தே வைத்து. பதப்பொருள் : 'பேசும் பொருளுக்கு - உயர்த்திச் சொல்லப்படும் பொருள்களுக்கெல்லாம், இலக்கிதமாம் - இருப்பிடமாய் உள்ள, பேச்சு இறந்த - சொல்லின் அளவைக் கடந்த, மாசு இல்மணியின் - குற்றமற்ற மாணிக்கம் போன்ற இறைவனது, மணிவார்த்தை பேசி - அழகிய புகழ் மொழிகளை உரைத்து, பெருந்துறையே என்று - திருப்பெருந்துறையே என்று போற்றி, நல்ல மருந்தின் அடி - நன்மையைத் தரும் மருந்து போன்ற அவனது திருவடியை, என் மனத்தே வைத்து - என்னுடைய மனத்தில் அமைத்து, பிறப்பு அறுத்தேன் - பிறவியாகிய பிணியை நீக்கிக்கொண்டேன். விளக்கம் : உயர்த்திச் சொல்லப்படும் பொருள்களாவன, உண்மை, அறிவு, இன்பம் முதலியன; அவை அனைத்தையும் இறைவன் உடையவனாகலின், 'பேசும் பொருளுக்கு இலக்கிதமாம் 'மாசில் மணி' என்றார், 'பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன்' என்றதனால், நினைக்க முத்தி தரும் தலம் உள்ளது போல, வாழ்த்த முத்தி தரும் தலம் திருப்பெருந்துறை என்று கொள்ளலாம். ஏன் எனில், அங்கு வீற்றிருக்கும் பெருமான் பிறவிப் பிணிக்கு மருந்தாதலின் என்க. 'நல்ல மருந்தினடி' என்றதில் இக்குறிப்பைக் காண்க, இலக்கிதம் - குறிக்கப்பட்டது. இதனால், இறைவன் பிறவிப்பிணிக்கு மருந்து என்பது கூறப்பட்டது. 7 திருச்சிற்றம்பலம்
|