நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல எண்ணி எழுகோ கழிக்கரசைப் - பண்ணின் மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக் கழியா திருந்தவனைக் காண். பதப்பொருள் : நம் இடர்கள் போய் அகல எண்ணி - நம் துன்பங்கள் நீங்கிப் போகும் வழியை ஆராய்ந்து, எழுகோ கழிக்கு அரசை - திருப்பெருந்துறைக்குத் தலைவனும், பண்ணின் மொழியாளோடு - பண் போன்ற மொழிகளையுடைய உமையம்மையோடு, உத்தர கோச மங்கை மன்னி - திருவுத்தரகோசமங்கையில் நிலைபெற்று, கழியாதிருந்தவனை - நீங்காதிருந்தவனும் ஆகிய இறைவனை, பெருந்துறையை நண்ணி - திருப்பெருந்துறையை அடைந்து, காண் - நெஞ்சே காண்பாயாக. விளக்கம் : அடிகளுக்குப் பெருமான் உத்தரகோசமங்கையில் அம்மையப்பனாகக் காட்சி கொடுத்தருளினான் ஆதலின், 'பண்ணின் மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னி இருந்தவன்' என்றார். அடிகளுக்குத் திருப்பெருந்துறையில் குருவாய் வந்து அருளிய பெருமான் பின்பு உத்தரகோசமங்கையிலும் தோன்றி அருள் செய்தமையால், 'கோகழிக்கு அரசை, உத்தரகோசமங்கை நீங்காதிருந்தவனைப் பெருந்துறையை நண்ணிக்காண்' என்று நெஞ்சை நோக்கிக் கூறினார். இதனால், இறைவனை வழிபட்டால் துன்பம் போயகலும் என்பது கூறப்பட்டது. 5 காணுங் கரணங்கள் எல்லாம்பேரின்பமெனப் பேணும் அடியார் பிறப்பகலக் - காணும் பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியானை வாயாரப் பேசு. பதப்பொருள் : நெஞ்சே - நெஞ்சமே, காணும் கரணங்கள் எல்லாம் - அறிகின்ற கருவிகள் எல்லாம், பேரின்பம் என - பேரானந்தத்தையே நுகர்வனவாகும்படி, பேணும் அடியார் - தன்னை விரும்புகின்ற அடியார்களது, பிறப்பு அகல - பிறவி நீங்கும்படியாக, காணும் பெரியானை - அருளுகின்ற பெரியோனும், பெருந்துறையில் - திருப்பெருந்துறையில், என்றும் பிரியானை - எந்நாளும் நீங்காதவனும் ஆகிய சிவபெருமானை, வாயாரப் பேசு - நீ வாயார வாழ்த்துவாயாக. விளக்கம் : அருள் பெற்ற அடியார்கள், தாம் காண்கின்ற பொருளனைத்தையும் சிவமாகவே காண்பராதலின், காண்பதற்குத் துணையாய் நிற்கும் அவர்களது கருவிகளும் சிவமாகவே நிற்கும்; அதனால், 'காணுங் கரணங்கள் எல்லாம் பேரின்பமெனப் பேணும்
|