திருக்கோலத்தை. மூன்றும் அன்பர்கட்கு அருள் செய்யும்பொருட்டு வந்த திருக்கோலங்களாதலின், 'நம் வினையை வீட்டியருளும்' என்றார். எனவே, தம்மைப் போலும் அடியார் பலரையும் குறித்து, 'நம் வினையை' எனக் கூறியபடியாம். 'பாகன்' என்றதற்கு, 'பாகனாய்' எனப் பொருள் கூறுக. 'பிற துன்பங்களேயன்றி மூலமலமும் கெட' எனப் பொருள் தருதலால், 'மருளும்' என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சவும்மை. வினைகளுக்குக் காரணம் அறியாமை, இறைவனை வாழ்த்தினால் அறியாமையாகிய காரணம் கெட வினைகளாகிய காரியமும் இன்றாம் என்பதாம். இதனால், இறைவனை வாழ்த்த வேண்டும் என்பது கூறப்பட்டது. 3 வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந் தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் - சூழ்ந்தமரர் சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். பதப்பொருள் : வாழ்ந்தார்கள் ஆவாரும் - வாழ்ந்தவர்களாவாரும், வல்வினையை மாய்ப்பாரும் - வலிய வினைகளைக் கெடுப்பவரும், உலகம் - உலகமானது, தாழ்ந்து - வணங்கி, ஏத்தத்தகுவாரும் - துதித்தற்குரியாரும் யாவரெனில், அமரர் - தேவர்கள், சூழ்ந்து சென்று - சூழ்ந்து போய், இறைஞ்சி - வணங்கி, ஏத்தும் - துதிக்கின்ற, திரு ஆர் பெருந்துறையை - அழகு நிறைந்த திருப்பெருந்துறையென்னும் திருப்பதியை, நன்று இறைஞ்சி ஏத்தும் - நன்றாக வணங்கித் துதிக்கின்ற, நமர் - நம்மவராகிய அன்பரேயாவர். விளக்கம் : திருப்பெருந்துறைப் பெருமானை ஒரு நெறிய மனம் வைத்து வழிபடும் ஒருவரே வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவராவார். ஆதலின், 'வாழ்ந்தார்கள் ஆவார் நன்றிறைஞ்சி ஏத்தும் நமர்' என்றார், இனி, இறைவனது பொருள் சேர் புகழையே கூறுதலால், அவர்களை இருள்சேர் இருவினையும் சேராவாதலின், அவர்களை, 'வல்வினையை மாய்ப்பாரும்' ஆவார், 'அவர்களை வையத்தவர் தெய்வத்துள் வைத்து வழிபடுவர்' என்பார், 'தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாரும் ஆவர்' என்றார். 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' என்ற நாயனார் மறைமொழியும் கண்டு மகிழ்க. இதனால், இறைவனை வாழ்த்துவதால் உண்டாம் பயன் கூறப்பட்டது. 4
|