உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன் வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக் கருவுங் கெடும்பிறவி்க் காடு. பதப்பொருள் : உள்ள மலம் மூன்றும் - உயிர்களிடத்து உள்ள ஆணவம் கன்மம் மாயையாகிய மும்மலங்களும், மாய - நீங்கியொழிய, உகு - பொழிகின்ற, பெருந்தேன் வெள்ளம் தரும் - பேரின்பமாகிய மிகுந்த தேன் பெருக்கை அவைகட்குக் கொடுக்கிற, பரியின்மேல் வந்த - குதிரையின்மீது வந்த, வள்ளல் - வள்ளலாகிய சிவபெருமான், மருவும் - எழுந்தருளியிருக்கிற, பெருந்துறையை - திருப்பெருந்துறையை, வாழ்த்துமின்கள் - உலகத்தவரே வாழ்த்துங்கள்; வாழ்த்த - வாழ்த்தினால், பிறவிக்காடு - பிறவியாகிய காடானது, கருவும் கெடும் - வேரோடும் அழியும். விளக்கம் : இறைவனை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இன்ப ஊற்றுப் பெருகுமாதலின், 'உகுபெருந்தேன் வெள்ளந் தரும் வள்ளல்' என்றார் 'ஆனந்தத் தேன் சொரியுங் குனிப்புடையான்' என்று திருக்கோத்தும்பியில் முன்னர்க் கூறியதையும் காண்க. பரியின்மேல் வந்தது, குதிரையின்மேல் வந்து தம்மையாட் கொண்டதையாம். பிறவிக்காடு வேரோடும் கெடுதலே இறைவணக்கத்தால் பெறும் உண்மைப் பயனாகும். இதனால், இறைவனது பதியை வணங்க வேண்டும் என்பது கூறப்பட்டது. 2 காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன் நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை - வீட்டி அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம் மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. பதப்பொருள் : நெஞ்சே - நெஞ்சமே, காட்டகத்து வேடன் - காட்டினிடத்து வேடனாகவும், கடலில் வலைவாணன் - கடலினிடத்து வலைஞனாகவும், நாட்டில் பரிப்பாகன் - நாட்டினிடத்துக் குதிரை வீரனாகவும் வந்து, நம் வினையை நம்முடைய வினைகளை, வீட்டி அருளும் - கெடுத்து அருள் புரிகின்ற, பெருந்துறையான் - திருப்பெருந்துறையையுடைய பெருமானது, அம் - அழகிய, கமல பாதம் - தாமரை மலர் போன்ற திருவடிகளை, மருளும் கெட - அறியாமையும் நீங்கும்படி, வாழ்த்து - வாழ்த்துவாயாக. விளக்கம் : காட்டகத்து வேடன் என்றது, அருச்சுனன் பொருட்டு வேடனாய் வந்த திருக்கோலத்தை. கடலில் வலைவாணன் என்றது, கடலில் வலை வீசின திருக்கோலத்தை. நாட்டில் பரிப்பாகன் என்றது, நரி பரியாக்கின காலத்தில் குதிரைச் சேவகனாய் வந்த
|