48. பண்டாய நான்மறை (திருப்பெருந்துறையில் அருளியது) 'பண்டாய நான் மறை' எனத் தொடங்குவதால், இப்பதிகம் பண்டாய நான்மறை எனப்பட்டது. அனுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல் சிவானுபவத்துக்கு ஐயமின்மை கூறுதல். நேரிசை வெண்பா திருச்சிற்றம்பலம் பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனும் கண்டாரு மில்லைக் கடையேனைத் - தொண்டாகக் கொண்டருளுங் கோகழிஎன் கோமாற்கு நேஞ்சமே உண்டாமோ கைம்மா றுரை. பதப்பொருள் : நெஞ்சமே - நெஞ்சே, பண்டு ஆய - பழமையாகிய, நான்மறையும் - நான்கு வேதங்களும், பால் அணுகா - திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள எம் இறைவன் அருகில் நெருங்கமாட்டா; மால் அயனும் - திருமாலும் பிரமனும், கண்டாருமில்லை - அவனைப் பார்த்ததும் இல்லை; அங்ஙனமாக, கடையேனை - கீழ்ப்பட்டவனாகிய என்னை, தொண்டாக - அடிமையாக, கோகழி என் கோமாற்கு கொண்டருளும் - திருப்பெருந்துறையில் ஏற்றுக்கொண்டருளிய அவனுக்கு, கைம்மாறு உண்டாமோ - நாம் செய்யும் பதில் உதவி உண்டோ? உரை - சொல்வாயாக. விளக்கம் : இறைவனது சொரூப நிலையைக் காண முடியாது என்பதை, 'பண்டாய நான்மறையும் பாலணுகா' என்பதனாலும், தடத்த நிலையையும் செருக்கிருப்பின் காண இயலாது என்பதை, 'தொண்டாகக் கொண்டருளும் கோமான்' என்பதனாலும் அன்பு உண்டாயின் எவ்வகையிலும் காணலாம் என்பதை; 'கடையேனைத் தொண்டாகக் கொண்டருளும்' என்பதனாலும் உணர்த்தினார். 'அருளும்' என்றதால் அருள் திருமேனி கொண்டுவருவது அவனது கருணையே காரணம் என்பதும் விளங்கும். இனி, 'எல்லாமுடைய பெருமானுக்கு நாம் என்ன பதில் உதவி செய்ய முடியும்? என்பார், 'உண்டாமோ கைம்மாறு?' என்றார். இதனால், இறைவனது கருணைத்திறம் கூறப்பட்டது. 1
|