பக்கம் எண் :

திருவாசகம்
622


விளக்கம் : இறைவன் நம உள்ளத்தை இடமாகக்கொண்டு எழுந்தருளியிருக்கின்றான் ஆதலின், புறத்தே எங்கும் தேடாது, அகத்தே அவனைத் தியானித்து வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை, நெஞ்சுக்கு அறிவுறுத்தும் முகமாகக் கூறியவாறாம். எல்லாம் தரும் என்றது, முன்னர்க் கூறிய தேவர் பதவி முதலிய எல்லாவற்றையும் தருவான் என்றபடி.

இதனால், இறைவன் செய்த கருணையை இடைவிடாது சிந்தித்திருக்க வேண்டும் என்பது கூறப்பட்டது.

10

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றுந்
துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய் - அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து.

பதப்பொருள் : சீர் ஆர் - சிறப்புப் பொருந்திய, பெருந்துறையான் - திருப்பெருந்துறையையுடையவன், இன்பம் பெருக்கி - இன்பத்தை மிகுவித்து, இருள் அகற்றி - அறியாமையாகிய இருட்டைப் போக்கி, எஞ்ஞான்றும் - என்றும், துன்பம் தொடர்வு அறுத்து - துன்பம் தொடர்ந்து வருதலை அறுத்து, சோதியாய் - ஒளிப்பிழம்பாய், அன்பு அமைத்து - அன்பினை நிறைத்து, என்னுடைய சிந்தையே - என்னுடைய சித்தத்தையே, உவந்து - விரும்பி, ஊர் ஆகக் கொண்டான் - தனது ஊராகக் கொண்டுவிட்டான்.

விளக்கம் : துன்பம் தொடர்ந்து வருமாதலின், அதனை, 'தொடர்வு' என்றார். 'அன்பமைத்து' என்றது, அன்பு நிறையும்படி செய்து என்றது. அன்புமீதூரப் பெற்றாலன்றி அனுபவம் இல்லையாதலின், அன்பமைத்துப் பின் சிந்தையை ஊராகக் கொண்டான் என்றார். ஊராகக் கொள்ளுதலாவது, நீங்காது வீற்றிருத்தல்.

இதனால், இறைவன் அடியார் உள்ளத்தில் வீற்றிருந்தருளுவான் என்பது கூறப்பட்டது.

11

திருச்சிற்றம்பலம்