என்றார். யாவரும் பெற்றறியா இன்பமாவது, மீண்டும் வாரா நெறியாம்; அஃதாவது, சாயுச்சிய பரமுத்தி. 'செய்யும் வகை அறியேன்' என்றதால், மிகத் தாழ்ந்த நிலையில் உள்ள தாம் மிக உயர்ந்த நிலையில் உள்ள இறைவனுக்குக் கைம்மாறு செய்ய முடியாது என்றதைக் கூறினார். இதனால், இறைவன் கருணைக்குக் கைம்மாறு இல்லை என்பது கூறப்பட்டது. 8 மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான் - மாவேறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யகத்தே இன்பம் மிகும். பதப்பொருள் : மூவரும் - மும்மூர்த்திகளும், முப்பத்து மூவரும் - முப்பத்து மூன்று தேவர்களும், ஒழிந்த மற்றுத் தேவரும் - அவர் ஒழிந்த ஏனைய தேவர்களும், காணா - காணாத, சிவபெருமான் - சிவபிரான், மா ஏறி - குதிரை ஏறி, வையகத்து வந்து இழிந்த - பூமியில் வந்து பொருந்திய, வார்கழல்கள் - நீண்ட திருவடிகளை, வந்திக்க - வணங்க, மெய் அகத்து - உடம்பினுள், இன்பம் மிகும் - பேரின்பம் பொங்கும். விளக்கம் : மூவராவார்; பிரமன், திருமால், உருத்திரன். முப்பத்து மூவராவார்: ஆதித்தர் பன்னிருவர், அசுவினி தேவர் இருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர். ஒழிந்த தேவராவார், இந்திரன் முதலிய தேவர்கள். மெய்யகம் என்பது உள்ளம். இறைவனை வணங்க இன்பம் உண்டாகும் என்பதாம். இதனால், இறைவன் திருவடி வணக்கம் இன்பத்தைத் தரும் என்பது கூறப்பட்டது. 9 இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித் திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாந் - தருங்காண் பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன் மருந்துருவாய் என் மனத்தே வந்து. பதப்பொருள் : நெஞ்சே, பெருந்துறையில் மேய - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய, பெருங்கருணையாளன் - பேரருளாளனாகிய சிவபெருமான், மருந்து உருவாய் - அமுத வடிவமாய், என் மனத்தே வந்து இருந்து - என் உள்ளத்தே வந்து தங்கி, என்னை ஆண்டான் - என்னை ஆட்கொண்டான்; ஆதலால், அவனது, இணை அடியே சிந்தித்து இருந்து - இரண்டு திருவடிகளையுமே இடைவிடாது நினைத்துக்கொண்டிருந்து, இரந்துகொள் - வேண்டிக்கொள்; எல்லாம் தரும் - அவன் நீ வேண்டிய எல்லாவற்றையும் தந்தருளுவான்.
|