பக்கம் எண் :

திருவாசகம்
620


இதனால், இறைவன் சொல்லிறந்த இன்பம் அருளுவான் என்பது கூறப்பட்டது.

6

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே - சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி.

பதப்பொருள் : சீர் ஆர் - சிறப்புப் பொருந்திய, திருத்தென் பெருந்துறையான் - அழகிய திருப்பெருந்துறையையுடையவனாகிய, என் சிந்தை மேய ஒருத்தன் - என் சித்தத்தில் எழுந்தருளிய ஒப்பற்றவன், பெருக்கும் - பெருக்குகின்ற, ஒளி - ஞானமானது, வாரா வழி அருளி - மீண்டும் பிறவிக்கு வாராத வழியையருளி, மாறு இன்றி வந்து - வேறின்றி வந்து, எனக்கு ஆரா அமுதாய் - அடியேனுக்குத் தெவிட்டாத அமுதமாய், அமைந்தன்று - அமைந்தது.

விளக்கம் : ஞானம் பெற்ற பின்னர் அது பெருகி முதிருமாதலின், 'பெருக்கும் ஒளி' என்றும், ஞானம் முதிர்ந்த பின்னர்ப பிறவியில்லையாமாதலின், 'வாரா வழியருளி' என்றும் கூறினார். 'மாறின்றி வந்து' என்றது, அத்துவிதமாகக் கலந்திருத்தலைக் குறித்தது. ஞான அனுபவம் இன்பமாய் இருக்குமாதலின், 'ஆரா அமுதமாய் அமைந்தன்று' என்றார்.

இதனால், திருவடி ஞானம், பிறப்பையறுத்து பேரின்பத்தையளிக்கும் என்பது கூறப்பட்டது.

7

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்குங் கீழாம் அடியேனை - யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை.

பதப்பொருள் : யாவர்க்கும் - எல்லோர்க்கும், மேலாம் - மேம்பட்ட, அளவு இலா - எல்லையில்லாத, சீர் உடையான் - சிறப்பு உடையவனே, என் எம் பெருமான் - என்னுடைய எம்பிரானே, யாவர்க்கும் - எல்லோர்க்கும், கீழ் ஆம் அடியேனை - கீழ்ப்பட்ட அடியேனை, யாவரும் - எவரும், பெற்றறியா - பெற்று அறியாத, இன்பத்துள் - ஆனந்தத்தில், வைத்தாய்க்கு - ஆழ்த்திய உனக்கு, மற்றுச் செய்யும் வகை - கைம்மாறு செய்யும் விதத்தை, அறியேன் - அறிந்திலேன்.

விளக்கம் : 'யாவர்க்கும் மேலாம்' என்றது, 'தேவர் மூவர் முதலியோர்க்கும் மேலானவன் இறைவன்' என்றபடி. அடிகள் தம்மை அடியார் அனைவரிலும் தாம் மிகத் தாழ்ந்த நிலையில் இருப்பதாக நினைப்பதால், 'யாவர்க்கும் கீழாம் அடியேனை'