பக்கம் எண் :

திருவாசகம்
647


இடர்ப்பட்டு - கடைக்கண் பார்வையால் துன்பப்பட்டு, நெஞ்சு ஆய துயர் கூர - மனத்தில் உண்டாகிய துன்பம் மிகும்படி, நிற்பேன்- நிற்பவனாகிய நான், உன் அருள் பெற்றேன் - உன் திருவருளைனப் பெற்றேன்; நான் உய்ஞ்சேன் - இனி நான் பிழைத்தேன்; உடையானே - என்னை உடையவனே, அடியேனை - அடியேனாகிய என்னை, வருக என்று - வருவாய் என்றும், அஞ்சேல் என்று - அஞ்சாதே என்றும், அருளிய ஆறு - எனக்கு நீ அருளிய முறையினை, ஆர் பெறுவார் - வேறு யார் பெற வல்லவர்? அச்சோ - இஃது அதிசயம்!

விளக்கம் : அருட்சார்பு இல்லாதவர் மருட்சார்பில் சென்று மயங்குவராதலின், 'மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நெஞ்சாய துயர் கூர நிற்பேன்' என்றார். 'அங்ஙனம் மயங்கித் துன்புறுகின்ற எனக்கு அருட்சார்பினை நல்கியதோடு, அபயமும் தந்து ஆண்டது என்ன அதிசயம்!' என்று வியக்கிறார். 'வருக' என்பதும், 'அஞ்சேல்' என்பதும் அடிகளுக்கு இறைவன் நேரே அருள் செய்தமையை விளக்கும் அகச்சான்றுகளாம்.

இதனால், இறைவன் அபயம் கொடுத்து அருள வல்லவன் எனபது கூறப்பட்டது.

5

வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழுல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்
தந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

பதப்பொருள் : வெந்து விழும் - தீயினால் வெந்து சாம்பராய் விழுகின்ற, உடல் பிறவி - இவ்வுடம்பின் பிறப்பை, மெய் என்று - நிலையானது என்று எண்ணி, வினை பெருக்கி - வினைகளை மிகச் செய்து, கொந்து குழல் - பூங்கொத்துகளையணிந்த கூந்தலையும், கோல் வலையார் - திரண்ட வளையலையும் உடைய பெண்டிரது, குவிமுலைமேல் - குவிந்த தனங்களின்மீது, வீழ்வேனை - விரும்பி விழ இருக்கின்ற என்னை, பந்தம் அறுத்து - பாசத்தை அறுத்து, எனை ஆண்டு - என்னை ஆட்கொண்டு, பரிசு அற - என் ஜுவத்தன்மை கெடும்படி, என் துரிசும் அறுத்து - என் குற்றத்தையும் போக்கி, அந்தம் - முடிவான பரமுத்தியை, எனக்கு அருளிய ஆறு - எனக்கு இறைவன் அருள் செய்த முறையினை, ஆர் பெறுவார் - உலகத்தில் யாவர் பெற வல்லவர்? அச்சோ - இஃது என்ன அதிசயம்!

விளக்கம் : உயிரைப் பற்றியுள்ள ஆணவம் முதலாய குற்றங்கள் நீங்கிய பின்னரே 'நான்' என்னும் முனைப்புக் கெட்டு ஜுவத்தன்மை நீங்குமாதலின், 'பரிசற என் துரிசு மறுத்து' என்றார். 'துரிசு என்றது