பக்கம் எண் :

திருவாசகம்
646


விளக்கம் : நிலையாதது சிற்றின்பம்; நிலைத்தது பேரின்பம்.பேரின்பத்தை அடைந்தவர்கட்கு இறப்பு இல்லையாதலின், 'மாளாமே காத்தருளி' என்றார். 'தையலிடங் கொண்ட பிரான்' என்றதனால், அவ்வடிவம் தையலார் மையலை மாற்றுவது என்பது விளங்கும். 'சிற்றின்பத்தையே பெரிதென மதித்து மயக்க முறுதற்குரிய எனக்குப் பேரின்பத்தையே நுகருமாறு செய்ததுஅதிசயம்!' என வியக்கிறார்.

இதனால், இறைவன் பேரின்பத்தை அருள வல்லவன் என்பது கூறப்பட்டது.

3

மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்
அண்ணலெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

பதப்பொருள் : மண்ணதனில் - மண்ணுலகில், பிறந்து எய்த்து - பிறந்து இளைத்து, மாண்டு விழக்கடவேனை - அழிந்து போகக்கூடிய என்னை, எண்ணமிலா அன்பு அருளி - நான் நினையாத அன்பை எனக்கு அருளி, எனை ஆண்டிட்டு - என்னை ஆட்கொண்டு, என்னையும் - அடியேனையும், தன் சுண்ண வெண்ணீறு அணவித்து - தனது பொடியாகிய வெண்மையான திருநீற்றைப் பூசும்படி செய்வித்து, தூய் நெறியே சேரும் வண்ணம் - தூய்மையான வழியையே அடையும்படி, அண்ணல் - பெரியோனாகிய இறைவன், எனக்கு அருளிய ஆறு - எனக்கு அருள் செய்த முறையினை, ஆர் பெறுவார் - வேறு யார் பெற வல்லவர், அச்சோ - இஃது அதிசயம்.

விளக்கம் : அன்பு இறைவனை அடைவதற்குரிய சாதனம். திருவெண்ணீறு, அடியாரது திரு வேடம். தூய நெறி, பிறவா நெறியாம் 'மண்ணில் பிறந்து இளைத்து மாளுதல் மாசுடைய நெறியாதலின். அன்பு முதலிய மூன்றையும் இறைவனே அருளிப் பிறவா நெறியிற்சேர்த்தது என்ன அதிசயம்!' என்று வியக்கிறார்.

இதனால், இறைவன் பிறவா நெறியை அருள வல்லவன் என்பது கூறப்பட்டது.

4

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் இருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்
றஞ்சேல்என் றருளியவ றார்பெறுவார் அச்சோவே.

பதப்பொருள் : பஞ்சு ஆய - பஞ்சு போன்ற, அடி - பாதங்கடையுடைய, மடவார் - பெண்டிரது, கடைக்கண்ணால்