பக்கம் எண் :

திருவாசகம்
645


நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.

பதப்பொருள் : நெறி அல்லா நெறி தன்னை - நல்ல வழியல்லாத வழியை, நெறி ஆக நினைவேனை - நல்ல வழியாக நினைக்கின்ற என்னை, சிறு நெறிகள் சேராமே - சிறு வழிகளையடையாமல், திருவருளே சேரும் வண்ணம் - திருவருளையே அடையும் படி, குறி ஒன்றும் இல்லாத - தனக்கென வடிவம் ஒன்றும் இல்லாத, கூத்தன் - கூத்தப் பெருமான், தன் கூத்தை - தனது அருள் விளையாட்டை, அறியும்வண்ணம் - யான் அறிந்துகொள்ளும்படி, எனக்கு அருளியவாறு - எனக்கு அறிவித்தருளிய தன்மையினை, ஆர் பெறுவார் - வேறு யார் பெற வல்லவர்? அச்சோ - இஃது அதிசயம்.

விளக்கம் : நெறியல்லா நெறியாவது, சிவபெருமானை நினையாது பிறவற்றை நினைக்கின்ற நெறி. திருவருள் நெறியாவது, அவனை நினைந்து அவன் அருள் வழி நிற்கின்ற நெறி. இறைவனது அருள் விளையாடலாவது, ஐந்தொழில்கள். அறிவித்தலாவது, அவற்றின் உண்மையை - அஃதாவது, ஐந்தொழில்கட்கும் அவனே முதல்வன் என்பதையும் படைத்தல் முதலியவற்றில் ஒவ்வொன்றைச் செய்வோர், அவன் ஆணைவழி நிற்கும் அதிகாரிகள் எனவும் உணரச்செய்தல். உருவமேயில்லாத பெருமான் தமக்கு உண்மையினை விளக்கும்பொருட்டு உருவு கொண்டு எழுந்தருளியாட்கொண்டான் என்று வியக்கிறார்.

இதனால், இறைவன் உண்மை நெறியைக் காட்ட வல்லவன் என்பது கூறப்பட்டது.

2

பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

பதப்பொருள் : பொய்யெல்லாம் மெய்யென்று அழியுந்தன்மையவற்றை அழியாதவை என்று எண்ணி, புணர் முலையார் போகத்தே - நெருங்கிய தனங்களையுடைய பெண்களது இன்பத்திலே, மையல் உறக்கடவேனை - மயங்கிக் கிடத்தற்குரிய என்னை, மாளாமே காத்தருளி - அழிந்து போகாமல் பாதுகாத்து, தையல் - உமையம்மையை, இடம் கொண்ட பிரான் - இடப்பாகத்தே கொண்ட பெருமானும், ஐயன் - தலைவனும் ஆகிய இறைவன், தன் கழலே சேரும் வண்ணம் - தனது திருவடியையே அடைந்து யான் பேரின்பமுறுபடி, எனக்கு அருளிய ஆறு - எனக்கு அருள் செய்த முறையினை, ஆர் பெறுவார் - வேறு யார் பெற வல்லவர்? அச்சோ - இஃது அதிசயம்.