51. அச்சோப்பதிகம் 'அச்சோ' என்பது வியப்பிடைச்சொல். இறைவன் தமக்குச் செய்த கருணையை அச்சோ என்று வியந்து பாடிய பதிகமாதலின், இஃது அச்சோப்பதிகம் எனப்பட்டது. அனுபவவழி அறியாமை அனுபவம் வந்த வழியை அறியாமை. திருச்சிற்றம்பலம் கலி விருத்தம் முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. பதப்பொருள் : முத்தி நெறி அறியாத - வீடு பெறும் வழியை அறியாத, மூர்க்கரொடு முயல்வேனை - மூர்க்கரொடு சேர்ந்து அவர்வழி ஒழுகுவேனாகிய எனக்கு, பத்தி நெறி அறிவித்து - பத்தி வழியைக் காட்டி, பழவினைகள் பாறும் வண்ணம் - பழமையாகிய வினைகள் கெடும்படி, சித்தமலம் அறுவித்து - அறிவைப் பற்றியுள்ள மூல மலத்தினைப் போக்கி, சிவம் ஆக்கி - சிவமாந்தன்மையைத் தந்து, எனை ஆண்ட - என்னை ஆண்டருளின, அத்தன் - என் தந்தையாகிய இறைவன், எனக்கு அருளிய ஆறு - எனக்கு அருள் செய்த முறையை, ஆர் பெறுவார் - வேறு யார் பெற வல்லார்? அச்சோ - இஃது அதிசயம். விளக்கம் : 'மூர்க்கரொடு' என்பது, கொண்டது விடாது பற்றி நிற்கின்ற பிடிவாதக்காரரோடு என்பதாம். மலம் காரணம்; வினை காரியம்; மலத்தைப் போக்கினால் வினை அற்று ஒழியும்; 'சிவமாந்தன்மை வெளிப்பட்டு விளங்கும்' என்பர், 'சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி' என்றார். இதனைச் செய்தான் இறைவன் என்ற வியப்பினால், 'அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே' என்றார். இதனால், இறைவன் மாசினைப் போக்கித் தூய்மை செய்ய வல்லவன் என்பது கூறப்பட்டது. 1
|