இதனால், இறைவன் ஒருவனே ஆறுதல் அருள வல்லவன் என்பது கூறப்பட்டது. 6 நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய் அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே தெரிய அரிய பரஞ்சோதீ செய்வ தொன்றும் அறியேனே. பதப்பொருள் : நரியை - நரிகளை, குதிரைப்பரி ஆக்கி - குதிரை வாகனமாக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்து - உலகம் முழுதிலும் நடத்தி, பெரிய - பெருமையுடைய, தென்நன் - அழகிய நல்ல, மதுரை எல்லாம் - மதுரையிலுள்ளாரையெல்லாம், பிச்சது ஏற்றும் - மயங்கும்படி செய்த, பெருந்துறையாய் - திருப்பெருந்துறையுடையவனே, அரிய பொருளே - பெறுவதற்கு அருமையான பொருளே, அவிநாசி அப்பா - அவிநாசியில் எழுந்தருளியிருக்கின்ற அப்பனே, பாண்டிவெள்ளமே, - பாண்டிநாட்டில் உள்ள அருள் வெள்ளமே, தெரிய அரிய பரஞ்சோதீ - அறிவதற்கு அருமையான மேலான ஒளியே. செய்வது ஒன்றும் அறியேன் - இனி யான் செய்யத்தக்கது இது என்று ஒன்றையும் அறிந்திலேன். விளக்கம் : பெருந்துறைப்பெருமானே மதுரைக்குக் குதிரைச் சேவகனாய்த் தம்பொருட்டு வந்து அருளினான் என்பார், 'பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறையாய்' என்றார், இப்பாடலில், நரியைப் பரியாக்கியதற்கு அகச்சான்று காண்க. அவிநாசி என்பது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தலம். மயக்கத்தைத் தெளிவித்து அருள வேண்டுமென்ற விருப்பம் தெரிவித்தவாறாம். இதனால், இறைவன் அறிவித்தாலன்றி நாம் அறிய முடியாது என்பது கூறப்பட்டது. 7 திருச்சிற்றம்பலம்
|