மரத்தின்கீழ் அன்று அடியேனை ஆட்கொண்டாய்; ஆயினும், இன்னும் உன்னோடு சேர்த்துக்கொள்ளவில்லையே!' என்று வருந்தி, 'அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ?' என்றார். கருணை புரிந்து சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பம் தெரிவித்தவாறாம.் இதனால், இறைவன் அருள் இன்றேல் நன்மை இல்லை என்பது கூறப்பட்டது. 5 கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான் சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான தேற்றாயே. பதப்பொருள் : கோவே - இறைவனே, அருள வேண்டாவோ - உன் அடியவனுக்கு அருள் புரிதல் உனக்குக் கடமையன்றோ? கொடியேன் கெட அமையுமே - கொடுமையுடையவனாகிய யான் கெட்டு ஒழிதல் பொருந்துமோ? ஆவா என்னாவிடில் - நீ ஐயோ என்று இரங்காவிட்டால், என்னை அஞ்சேல் என்பார் - அஞ்சாதே என்று சொல்லி என்னை ஆட்கொள்வார், ஆரோ - வேறு யாரேனும் உளரோ? சாவார் எல்லாம் - பிறவிப்பயனை எய்தாது இறப்பவர் எல்லோரும், என் அளவோ - என்னைப் போல உன்னால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்தாமோ? ஆதலால், இந்நிலை அடியேனுக்கு எய்தியது, தக்கவாறு அன்று - தகுதியுடையது அன்று; என்னாரோ - என்று பலரும் சொல்ல மாட்டார்களா? தேவே - தேவனே, தில்லை நடம் ஆடீ - தில்லையில் நடனம் செய்பவனே, திகைத்தேன் - யான் கலக்கம் அடைந்தேன்; இனித்தான் - இனியாயினும், தேற்றாய் - என்னைத் தெளிவிப்பாயாக. விளக்கம் : 'உலகிலே பிறந்து, பிறவிப் பயனை எய்தாது இருக்கின்றவர்களைப் போலத்தான் அடியேனும் பிறந்து பயனற்று இறக்க வேண்டுமா?' என்பார், 'சாவாரெல்லாம் என்னளவோ?' என்றார். 'அங்ஙனமாயின், இது ஆண்டவனாகிய உன் பெருமைக்குக் குறை அல்லவா?,' என்பார், 'தக்கவா றன்றென்னாரோ?' என்றார். மீண்டும் பிறப்பதற்கு அஞ்சுவார், 'திகைத்தேன்' என்றார். 'இந்நிலை ஏற்படாவண்ணம் ஆறுதல் கூற வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்தவாறாம்.
|