1


சிவமயம்
 

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாந்திருமுறையில் உள்ள

தலங்களின் வரலாற்றுக் குறிப்பு

கல்வெட்டாராய்ச்சிக்கலைஞர்,

வித்துவான், திரு. வை. சுந்தரேச வாண்டையார்

கங்கைகொண்ட சோழேச்சரம்
 

பிற்காலச்  சோழர்களில்  விசயாலயன்   காலம்   முதல், முதலாம்
இராசராசன்  காலம்  முடிய,   (கி.  பி.  846  -  1014)  பத்துத்தலை
முறைகளாகத்    தஞ்சாவூர்   சோழமன்னர்களின்    தலைநகரமாய்த்
திகழ்ந்திருந்தது. இத்தஞ்சாவூர்  பாண்டி நாட்டின் எல்லைக்கு அருகில்
இருந்தமையால்,     தலைநகரம்     பாண்டியர்களால்    அடிக்கடித்
தாக்கப்படும்    என்ற    காரணம்   பற்றியும்,  அக்காலம்   மாதம்
மும்மாரிபெய்து      கொள்ளிடப்பேராறு    வெள்ளப்பெருக்கெடுத்து
ஓடினமையால்,  முதலாம் இராசேந்திர  சோழன்,  (முதலாம் இராசராச
மன்னனின்     மகன்)     தன்      குலதெய்வமாகிய     தில்லை
நடராசப்பெருமானைத்   தன்   பரிவாரங்களோடு  சென்று  அடிக்கடி
வழிபடுவதற்கு   அக்கொள்ளிடப்   பேராறு   தடையாய்  இருந்தமை
பற்றியும்,   அக்காலம்   கொள்ளிடப்  பேராற்றுக்கு  இக்காலம்போல்
அணைக்கட்டு    இல்லாமையாலும்   சோழநாட்டின்   நடுப்பகுதியில்
தலைநகரை   அமைக்க   வேண்டும்   என்ற   காரணம்   பற்றியும்.
கங்கைகொண்ட சோழபுரத்தைத்  தலைநகராகக்  கொண்டான். இங்கே
தலைநகரை   நிர்மாணம்   பண்ணுவதற்கு   வேண்டிய  சுண்ணாம்பு,
செங்கல்  முதலியவைகள்  தயாரித்த  இடங்கள்  எல்லாம்  இக்காலம்
அவ்வப்பெயர்களுடன்   சுண்ணாம்புக்குழி  முதலான  சிற்றூர்களாகத்
திகழ்கின்றன.  கோட்டை இருந்த இடம் உள்கோட்டை (உக்கோட்டை)
என்றபெயருடனும்,  ஆயுத  சாலைகள்  இருந்த  இடம் ஆயிரக்கலம்
என்னும்  பெயருடனும் இன்றும் நிலவுகின்றன. இங்ஙனம்புதியநகரை நிர்மாணம்  பண்ணின   முதலாம்   இராசேந்திரசோழன்,  அதனைக் கங்கைநீரால்  புனிதம்  பண்ணவேண்டும்  என்று  எண்ணி, கங்கைநீர் கொணர,    தன்படைத்    தலைவனிடம்   ஒரு    பெரும்படையை அனுப்பினான்.