252. ‘‘நிமலத்திரளை’’ என்பது முதலாகத் தொடங்கிப் பூட்டு வில்லாக முடிக்க. நிமலத் திரள்-தூய்மையின் மிகுதி. ‘‘மனத்தினுளே இருந்த மணி’’ என்றது அற்புத உருவகம். பின்னர் வந்த மணி, அழகு. ‘‘மணியை’’ எனவும், ‘‘மாணிக்கத்தை’’ எனவும் வேறு வேறாகக் கூறினாராயினும், ‘மாணிக்க மணியை’ என்பதே கருத்தென்க. கனைத்து-ஒலித்து. கனகம்-மிக்க நீர். ‘‘கழனி’’ என்பதன்றி, ‘கனநீர்’ என்பதே பாடம் போலும்! கனம்-மேகம்.‘‘சினத்தொடு வந்து’’ என்றது, தற்குறிப்பேற்றம். 253. வானவர்தம் கொழுந்து-தேவ கூட்டத்திற்குத் தலையாயவன். பின்னர், ‘‘கொழுந்தாய்’’ என்றது, ‘எல்லாப் பொருட்கும் கொழுந்தாய்’’ என்றவாறு. எழுந்த - தோன்றிய; என்றது, படைப்புக் காலத்தில் முதற்கண் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு நின்றமையை, ‘‘முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி’’ என்றார் நாவுக்கரசர் (திருமுறை-6.19.9). ‘மூத்தவனை’ என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. மூத்தவன்-முன்னோன். நிலையை, ‘உரு’ என்றார். முந்நிலையாவன. ‘படைக்கும் நிலை, காக்கும் நிலை, அழிக்கும் நிலை’ என்பன. பின்னர், ‘‘முதலாகி நின்ற’’ என்றது, ‘எல்லாச் செயல்கட்கும் |