முதலாகி நின்ற’ என்றவாறு. ‘நின்ற எம்பிரான்’ என இயையும். ‘‘ஆத்தனைப் படுக்கும் அந்தணர்’’ என்றதற்கு, முன், ‘‘ஆவே படுப்பார் அந்தணாளர்’’ என்றதற்கு (196) உரைத்தவாறே உரைக்க. தான், அசைநிலை, ‘‘தில்லை யம்பலத்துள்’’ என்றதனை, ‘‘நின்ற’’ என்றதன்பின்னர்க் கூட்டுக. கொல், ஐய இடைச்சொல் ஓகாரம், இரக்கப்பொருட்டு. 254. ‘அன்னைமீர், என் நேசனை, அவன் அணி நீற்றை என் முலைக்கு அணியுமாறு, அவன் மலர்ப் பாதங்களைத் தழுவிச் சேர்வன்கொலோ’ எனக் கொண்டு கூட்டுக. ‘‘அன்னைமீர்’ என்றது, கைத் தாயரை. அணி-அழகு. பிறராயின் சந்தனகளபங்களைப் பூசிச் சேர்வர் இவன் திருநீற்றையே பூசிச் சேர்வான். ஆதலின், ‘‘அணிநீறு அணிய’’ என்றாள். வங்கம் மரக்கலம். ஏர்வு-எழுச்சி போல், அசைநிலை. ‘புவனேசன் என்பது, போனேசன் எனமருவிற்று’ என்பாரும், பிற உரைப்பாரும் உளர். 255. காய் சினம், இன அடை. மால் விடை-பெரிய இடபம். ‘திருமாலாகிய இடபம்’ எனலும் ஆம். காமரு-விரும்பத் தக்க. சீர்-அழகு. ‘சீர்த் தில்லை’ என இயையும். தேசம் மிகு புகழ்-நில முழுதும் பரவிய புகழ். ‘‘புகழோர்’’ என்றது, தில்லைவாழ் அந்தணரை. ‘எவ்வுயிர்க்கும் இறைவன் |