பக்கம் எண் :

11
 

22. மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தான் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.1

(ப. இ.) மாயை மாயையின் ஆக்கம் முதலிய உலகங்களை என்றும் உடைமையாகவுடையவன் சிவன். அதனால், அவன் மாய நல்நாடன் எனப்படுவன். அவன் அன்பர் மனத்துத் தோன்றுகின்றவன். உலகினர் அவன் பெருமையைத் தெளிவாக விளங்கக் கூறினும் செவி கொடார். அவன் நினைத்ததறியும் நீர்மையன் என்று கூறினும் நினைக்கிலர். தாங்கள் முயற்சி ஏதும் இன்றி இறைவன் எங்கள்பால் அன்பிலன் என்று குறை கூறுவர். அவன் பிறப்பற்றுச் சிறப்புற (பிழைக்க) முழுமனதுடன் வேண்டி நிற்பார் சார்பாய் அவரைச் சிறப்பாக ஆட்கொண்டருள்வன்.

(அ. சி.) மனத்திலெழுகின்ற மாய நன்னாடன் - ஒவ்வொருவர் மனத்திலும் எழுகின்ற எண்ணங்களை அறியும் ஒருவன். பிழைக்க நின்றார் - முத்திக் கரை சேர விரும்பி நின்றவர். (22)

23. வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.

(ப. இ.) சிவனுக்கே உரிய எண்குணங்களுள் முடிவிலாற்றலு மொன்றாதலின் அவன் எல்லாம் நினைப்பளவானே எளிதின் முடிக்கத் தகுந்த வியத்தகு பேராற்றல்சேர் வல்லவன் - சிவன். தீக்கடவுளைக் கடலின் நடுவாகக் கடல்நீர் மிகுந்து மேலேறா வண்ணம் ஆணையும் ஆற்றலும் ஈந்து நிறுத்தி வைத்தனன். இதுவே அறமுறையாகும். அத்தகைய ஆண்டவனை அன்பிலார்க் கறிய வொண்ணாமை பற்றி இல்லை என வேண்டா. தேவர்கள் முதல் யாவர்களுக்கும் முதல்வன். அல்லும் பகலும் என்னும் வேறுபாடின்றி இடையீடின்றி எப்பொழுதும் அருள் செய்கின்றான். வாரணம் - கடல்.

(அ. சி.) வன்னிக்கிறையிடை வாரணம் - கடலினுள்ளே தீயை.

(23)

24. போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி
தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்வம்
மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

(ப. இ.) 'தென்னா டுடைய சிவனே போற்றி', 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று திருமுறைப் போற்றித் தொடர்புகன்று


1. சார்ந்தாரைக். சிவஞானபோதம், 10 - 2-2.

1. பிறப்பானை. அப்பர், 6. 80 - 7.