பக்கம் எண் :

12
 

சிவனடியைப் புனலொடு பூவால் வழிபட்டும், பொருள்சேர் புகழ்களை எடுத்துப் புகழ்ந்தும் தூயவுடம்பும் வாலறிவும் அருளும் முதலாகவுடைய புனிதனை அவனருளால் தெளியுங்கள். எந்நாளும் சிவபெருமான் திருவடிக்கே ஈட்டிய செல்வ முதலியன உரிய என்று அறம்பல புரியுங்கள். அவ்வறத்திறத்தால் மயலுற்ற சிந்தையை மாற்றுங்கள். அங்ஙனம் மாற்றி நின்றார் வழிச் சிவன் நிலைபெற்று நிற்பன்.

(24)

25. பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி1 மாயா விருத்தமும் ஆமே.

(ப. இ.) சிவபெருமான் என்றும் பிறப்பில்லாதவன். பின்னற் சடையினையுடையவன். அளவிடப்படாத பேரருளாளன். என்றும் அழிவிலாதவன். யாவர்க்கும் குறைவிலா நிறையின்பம் அருளி அவரை விட்டு நீங்காதவன். அவனைத் தொழுங்கள். அங்ஙனம் தொழுதால் அவன் உங்களை ஒருபோதும் மறவான். மாயைக்கு மறுதலையாகிய இயற்கைப் பேரறிவினன். அன்னை அஞ்ஞை என்று வந்ததுபோல் பின்னல் பிஞ்ஞல் என்று வந்திருத்தல் அமையும்.

(அ. சி.) துறப்பிலி - தன்னை அடைந்தவர்களை நீக்காதவன். மறப்பிலி - தன்னைத் தொழுதவர்களை மறக்காதவன். மாயா விருத்தமும் ஆம் - மயக்கமும் ஒழியும்.

(25)

26. தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றுங்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
உடந்திருந் தானடிப் புண்ணிய மாமே.

(ப. இ.) ஆருயிர்களைப் புறம்புறம் திரிந்து என்றும் தொடர்ந்து நிற்கின்றவன் சிவன். அச் சிவனை அன்புடன் திருமுறைவழித் தொழுங்கள். தொழுதால் இடையறாது யாண்டும் இணைந்து நிறைந்து நிற்பன் சிவன். அனைத்தையும் சுமக்கும் நிலமுதல் மெய்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் சிவன். ஆருயிரின் நெஞ்சத் தாமரைமேல் உடங்கிருந்தருளினன். அத்தகைய சிவபெருமான் திருவடியினைத் தொழுவதே அழிவில் சிவ புண்ணியமாகும். மெய்கள் - தத்துவங்கள்.

(அ. சி.) பரிபாரகமுற்றும் கடந்து நின்றான் - அண்டங்களை யெல்லாம் கடந்து நின்றவன். கமலம் மலர்மேலே உடந்திருந்தான் - மலர் மிசையேகினான்.

(26)

27. சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்
தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படுமவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.


1. பிறப்போ. அப்பர், 6 . 30 - 5.