பக்கம் எண் :

13
 

(ப. இ.) சந்தி எனப்படும் அந்தியின் நிறம் சிவப்பு. அந்நிறம் போலும் தாமரை செந்தாமரை. அம் மலர்போலும் ஒளியுடைத் திருமுகம் சிவபெருமான் முகம். அவனே ஆண்டவன். அவன் திருவருள் எந்நாளும் நமக்கேயாம். அவ்வருளை அளிப்பவன் அழிவில் செல்வத்தன் ஆகிய நந்தி. அந் நந்தியை நாளும் வணங்கும் நல்லன்பர்தம் பிறந்த அறிவினுள் சிவபெருமான் புகுந்து நின்றனன்.

(அ. சி.) சந்தியெனத்தக்க - அந்தியில் தோன்றும் செவ்வான நிறத்தையுடைய. வணங்கப்படுமவர் - தொழும் அவர்.

(27)

28. இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை1 யாமே.

(ப. இ.) எங்கும் இணக்கத்துடன் நிறைந்து நின்றவனும் அங்ஙனம் நிற்பினும் அருட்கண் பெறாதார்க்குத் தோன்றாது பிணங்கி மறைந்து நிற்பவனும் சிவனே. உலக ஒடுக்கத்துக்குப் பின்னும் உலகத் தோற்றத்திற்கு முன்னும் நிற்பவனும் சிவனே. உயிர்க்குயிராய் நுணுகுதலாகி உணக்கத்துடன் நிற்பவனும் சிவனே. அவன் துறக்க வுலகத்துக்கு முதல்வன். வணங்கி வழிபட்டு நிற்பார்க்கே வழித்துணை யாவன். துறக்கவுலகம் ஈண்டுக் கயிலாயம்.

(அ. சி.) பிணங்கி - பொருந்தியும் பொருத்தாமலும். பின்முன் - படைப்புக்கு முந்தியும், அழித்தலுக்குப் பிந்தியும். உணங்கி நின்றான் - மறைந்து நின்றவன்.

(28)

29. காணநில் லாயடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணிய னாகி அமர்ந்துநின் றானே.

(ப. இ.) சிவபெருமானே, அடியேன் காணுமாறு வெளிப்பட்டருளாய். அடியேனுக்கு உன்னையன்றி வேறு உறவாவார் யாருளர்? நீ வெளிப்படின், உன்னை யான் அகந்தழுவுவதுபோல் புறந்தழுவுவதிலும் நாணுற்றுப் பின்னில்லேன். மனக்கோட்டம் சிறிதுமில்லாத அருட்பண்பு பெரிதும் செறிந்த செந்நெறிக் குணத்தடியார் நல்லுளத்தில் உயிர்க்குயிராய் நிற்பவன் சிவன். ஆதலால் அவன் அச்சாணியன்னானாகி அமர்ந்தருளுகின்றனன்.

(அ. சி.) ஆணியனாகி - ஆழப் பதிந்தவனாகி. கோணலில்லாத குணத்து அடியார் - மனக்கோட்ட மின்றி நலம்செய் அடியார்.

(29)

30. வானின் றழைக்கும் மழைபோல் இறைவனுந்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே.


1. சுழித்துணையாம். அப்பர், 6. 40-7.