பக்கம் எண் :

1285
 

"வேண்டுமருந் துண்டார்பால் மெய்நோய்கள் நீங்குமால்
நீண்டகண் கேள்வியால் நீங்காவாம் - பூண்டமொழிச்
சொற்பொருள்கள் ஓர்ந்தார்பால் தோயுமால் தோயாவாம்
பற்பலர்பால் அன்பின்பப் பண்பு."

தொன்மைத் தமிழின் நன்மையோர்ந்து 'வாயிருந் தமிழே படித்து', அதற்கு ஆளுறும் சீரியோரை இவ்வாரிய மயலினர் புறக்கணித்து ஒதுக்கிப் புறம் பழிப்பதும் செய்வர். அவ்வுண்மை வருமாறு: இருமொழி வல்லாராய், தெருள் உணர்வு சேர்ந்தாராய்ச் செந்தமிழ்க்கும் சிவனெறிக்கும் நீங்கா அடிமையராய், ஓங்கிய ஒழுக்க விழுமியராய், ஒப்பில் ஒருவராய்ச், செப்புந்தில்லைவாழ் அந்தணராய்த் திகழ்ந்தவர் உமாபதி சிவநாயனார். அவர் இருவகை வழக்கிலும் பொருவற என்றும் பொன்றாது நின்று நிலவும் தெய்வத்தன்மை வாய்ந்த நம் தமிழின் உண்மை மேன்மையை உணர்ந்து 'சிவப்பிரகாசம்' முதலிய அளவிறந்த செந்தமிழாகம நூற்களைத் திருவருளால் ஆக்கி உணர்த்தினமையால் அவ்வந்தணர் கூட்டம் அவரைக் காணவும் ஒண்ணாதெனப் புறக்கணித்தது. அம்பலவாணன் அவரைச் சிறக்கணித்துத் தமிழின் மேன்மையைத் தானும் வெளிப்படுத்துவான் திருவுள்ளங் கொண்டனன். ஒரு திருவிழாக் காலத்தில் உமாபதி சிவநாயனாரை விலக்கிக் கொடி யேற்றுவிக்கத் துவங்கினர். எத்துணை முயன்று பலர் கூடி வலிந்திழுத்தும் அந்தோ கொடி ஏறுமாறில்லை. பெருமக்களனைவர்களும் ஒருமிக்க வருந்தினர். அவர் வருத்தங்கண்டிரங்கி அம்பலவாணர் அருள்புரிந்து, "யாம் உமாபதி சிவநாயனாரின் விழைதகு பேழையகத்து உறைகின்றாம் அவர் வந்தால் கொடி யேறும்', என்றருளினர். அவ்வருள் தலைமேற்கொண்டு ஊரெலாம் சென்று நாயனாரைச் சிறப்புடன் அழைத்துக்கொண்டு வந்தது. அந் நாயனார் திருப்பேழையினை விழைவுடன் திறந்து செந்தமிழ்த் திருக்கொடிப் பாட்டு நான்கினையும் பாடியருளினர். திருக்கொடியும் தானே இவர்ந்து நிலைநின்றது. அனைவரும் என்னே தமிழ்க்கிளவி மந்திரத்தின் தனிமாண்பென இனிது மொழிந்து அகம்புறம் ஒத்து அளவில் மகிழ்வு மிகவும் பூண்டனர். அத்திருக்கொடிப்பாட்டுள் ஒன்று வருமாறு :

"அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் - நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையும்
கூசாமற் காட்டக் கொடி."

(கொடிக்கவி, 4.)

அந்தோ இந்நிகழ்வு நிகழ்ந்து ஏறத்தாழ எழுநூறியாண்டுகளாயின. எத்தனை திருக்கோவில்களில் இத் திருக்கொடிப்பாட்டுப் பாடிக் கொடி ஏற்றுகின்றனர்? எத்தனை திருக்கோவிலவர்களுக்கு இந்நிகழ்வு தெரியும்? எத்தனை திருமடத்தார் இதனைத் தெரியப்படுத்தியுள்ளனர்? பெருமக்களுக்கு