பக்கம் எண் :

1284
 

'உழக்குமறை நாலினுமு யர்ந்துலகம் ஓதும்
வழக்கினும திக்கவியி னினுமரபின் நாடி
நிழற்பொலிக ணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண்
தழற்புரைசு டர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்.'

(கம்பர், அகத்தியப்படலம், 41.)

இற்றைக்கு இருநூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன் விளங்கிய சிவப்பிரகாசவடிகள் ஆரிய வேதம் புரியாத மொழியிலிருப்பதும், பொய்ம்மைத் தேவரை மெய்ம்மைத் தேவரென மயக்குவிப்பது உண்மையாலும் பெருமக்கள் மனத்தையெட்டி உருக்குந்தன்மைய தன்றெனவும், திருவாசகச் செழுந்தமிழ்த் திரு மாமறை இருவகை வழக்கிலும் மக்களுக்குப் புரியும் கன்னிப் புண்ணியத் தமிழிலிருப்பதாலும், விழுமிய முழுமுதற் சிவபெருமான் ஒருவனே மெய்ப்பொருட் கடவுளென விளம்புவது உண்மையாலும் மக்கள் மனத்தையெட்டிக் கனிவித்து உருக்கி அன்பராக்கும் ஒண்மையதெனவும் உரைத்தருளினர். அதுவருமாறு :

"விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
காரண னுரையெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூ ரண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்த தென்குவீ ராயின்
வேத மோதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
திருவா சகமிங் கொருகா லோதிற்
கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்ப ராகுந ரன்றி
மன்பதை யுலகின் மற்றைய ரிலரே"

(நால்வர் நான்மணிமாலை, 4.)

மருந்து உண்டால் மட்டும் நோய் நீங்கும். கண்டதால் கேட்டதால் நோய் நீங்காது. அதுபோல் மறையும் சொற்பொருள் உணர்ந்து துய்ப்பார்க்கே அன்பின்புகள் உண்டாகும். பொருளுணராதார்பால் தெருளுணர்வுண்டாகாது. தெருள் தோன்றாமையால் மருளும் இருளும் மாயா. இவை மாயாவாகவே அன்பின்புகள் உண்டாகா இதனை வரும் வெண்பாவால் உணர்க :