பக்கம் எண் :

1283
 

இஞ்ஞான்று நிகழ்வதுபோன்று ஆளுடைய பிள்ளையார் காலத்துத் தமிழ்நாட்டுத் திருக்கோவில்களில் வழிபாடனைத்தும் ஆரியமொழியிலேயே நடந்திருக்குமானால் அவ்வாரிய மொழியில் நடக்கும் ஏனை நாட்டகத்துப் பிள்ளையார் செல்லத் திருவுள்ளங் கொள்ளாமைக்குக் காரணமின்று. எனவே தமிழ்நாட்டில் திருக்கோவில்களில் வழிபாடனைத்தும் தமிழ்மொழியினாலேயே நடந்துள்ளன என்பது தேற்றமாம். ஒரு சில ஆரியர் வருவாரானால் அவர்கள் அவர்தம் ஆரியமொழியில் வழிபட வாய்ப்பளித்துள்ளனர் தமிழகத்தார் என்பதுதான் துணிபு.

அவ்வுண்மை, திருப்பழனி வழிபாடு அவ்வூர்த் தமிழ்ப் பண்டாரப் பழங்குடி மக்களால் தமிழிலேயே தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வந்ததென்பதும், அவ்வழிபாடு ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்குமுன் சூழ்ச்சியால் பறிக்கப்பட்டுப் பேர் கொண்ட பார்ப்பார் வகையாள் கைக்கு மாற்றப்பட்டுவிட்ட தென்பதும் வரலாற்று உண்மை. அவ்வுண்மையினை மெய்ப்பிக்கும் அறிகுறியாக இன்றும் அப் பழங்குடி மக்களே திருமுழுக்குக்கு நாடொறும் திருமஞ்சனம் கொண்டுவந்து நல்குகின்றனர். அந் நீர் ஆட்டப்படுகின்றது. இந்நிகழ்ச்சி பேர் கொண்ட பார்ப்பார் வகையாள் வழிபாடு செய்யும் எத்திருக் கோவில்களிலும் இல்லாத நிகழ்ச்சியாகும். இதுபோலவே திருத்தணிகை, திருப்பதி முதலிய பல திருக்கோவில்களில் பழங்குடி மக்களே பண்டு தண்டமிழால் வழிபட்டுவந்து இடையே மாற்றப்பட்டிருப்பதாகவுங் கூறுகின்றனர்.

ஆரிய மறையினும் தமிழ்மறையே சீரும் சிறப்பும் வாய்ந்துளதென்பது அண்மையில் மறைந்த வள்ளலாரடிகளின் உள்ளம் நிறைந்த உண்மை மாண்புரையாகும். அது வருமாறு :

"இலைக்குளநீ ரழைத்ததனில் இடங்கருற வழைத்ததன்வாய்த்
தலைக்குதலை மதலையுயிர் தழைப்பவழைத் தருளியநின்
கலைக்கும்வட கலையின்முதற் கலைக்குமுறு கணக்குயர்பொன்
மலைக்குமணு நிலைககுமுறா வன்றொண்டப் பெருந்தகையே."

(ஆளுடைய நம்பிகள் அருண்மாலை, 3.)

ஆரிய நூலைச் சீரிய தமிழில் புனைபெருங்காப்பியமாக யாவரும் நினைவுற யாத்த கம்பரும் ஆரிய மறை மயக்கந் தருவதென்றும், அம்மொழியும் உலக வழக்கிறந்ததென்றும், கன்னிச் செந்தமிழ் மன்னிய முக்கட் செல்வனாய சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டதென்றும், அஃது எக்காலத்தும் இருவகை வழக்கிலும் பொன்றாது நின்று நிலவுவதென்றும், தென்றமிழ்நாட்டுமொழி செந்தமிழென்றும், ஆரிய மறையினும் உயர்ந்த நேரியதென்றும், தென்னாட்டுக் கடவுள் சிவபெருமானென்றும் உண்மையை ஒருசிறிதும் ஒழியாது உரைப்பாராயினர். அவ்வுண்மை வருமாறு :