நம்மவர்களுள் சிலர்க்கு ஏற்பட்டிருந்த ஆரியமறை மையலை அகற்ற கொற்றவன்குடி உமாபதி சிவனார் பாடியருளிய திருப்பாட்டு வருமாறு : "அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும் அதுபோலன் றிதுவென்று முளதா முண்மைப் பரபதமுந் தற்பரமும் பரனே யன்றிப் பலரில்லை யென்றெழுதும் பனுவல் பாரின் எரியினிடை வேவாதாற் றெதிரே யோடும் என்புக்கும் உயிர்கொடுக்கும் இடுநஞ் சாற்றும் கரியைவளை விக்குங்கன் மிதக்கப் பண்ணும்கராமதலை கரையிலுறக் காற்றுங் காணே." (திருமுறைகண்ட புராணம். 17.) இத்திருப்பாட்டின்கண் மூவர் அருளிச் செய்த வியத்தகுசெயல்கள் பலவற்றுள்ளும் ஏழு திருச்செயல்களே குறிக்கப் பெற்றுள்ளன. அவை மூவர் தேவாரம் ஏழு திருமுறைகள் என்னும் திருக்குறிப்புணர்த்தற்கென்க. அவை முறையே ஆளுடைய பிள்ளையார்க்கு மூன்று. ஆளுடைய அரசர்க்கு மூன்று, ஆளுடைய நம்பிகட்கு ஒன்று எனக்கொள்க. செந்தமிழ்த் திருநான்மறை நாட்டுவழக்கினும், வீட்டு வழக்கினும், நன்னெறி காட்டுந் திருக்கோவில் வழிபாட்டு வழக்கினும் முட்டின்றி நிகழ்தல்வேண்டும். அங்ஙனம் நிகழும் வாய்ப்புப் பெறாத நாட்டுக்கோ திருக்கோவிலுக்கோ 'செந்தமிழர் தெய்வமறைநாவர்' செல்லுவதால் எப்பயனும் இன்றென நம் ஆளுடைய பிள்ளையார் செல்லாது தமிழ்நாட்டிலிருந்தே தொழுது பாடி நம்மனோர்க்கு வழிகாட்டியருளினர். அவர்கள் காலத்து அவ்வாறு இருந்தது. நம் காலத்தோ தமிழ் நாட்டிலேயே அம் மூவிடத்தும் தமிழ் வழங்காநிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கோர் தீர்வு இறைவனே அருளுதல்வேண்டும். இவ்வுண்மை புலப்படுத்தும் திருப்பாட்டு வருமாறு : "அங்கண்வட திசைமேலும் குடக்கின் மேலும் அருந்தமிழின் வழக்கங்கு நிகழாதாகத் திங்கள்புனை முடியார்தந் தானந் தோறும் சென்றுதமிழ் இசைபாடும் செய்கை போல மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கே தாரந் தொழுது திருப் பதிகவிசை திருந்தப் பாடி." (12. சம்பந்தர், 102, 6.)
|