"நல்லிசை ஞானசம் பந்தனு நாவினுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி யேத்துகப் பானைத் தொண்ட னேனறி யாமை யறிந்து கல்லி யன்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டியென் களைகளை யறுக்கும் வல்லியல் வானவர் வணங்கநின் றானை வலிவ லந்ததனில் வந்துகண் டேனே." (ஆரூரர், 7. 67. 5.) என இருபெரும் முதல்வர்களால் பாடப்பெற்ற திருப்பாட்டுக்களும் திருமுறையின் ஏற்றத்தினைத் தெளிவிப்பதூஉம் காண்க. இத்துணைச் சிறந்த செந்தமிழ்த் திருமுறையினை நாள் வழிபாடு சிறப்புவழிபாடு முதலியவற்றின்கண் நாளும் ஓதி நன்மை எய்தும் பொருட்டுப் பின்னுள்ளோர் தில்லைத் திருமறையோர்பால் ஒப்புவித்துப் பெருநம்பிக்கை பூண்டிருந்தனர். அந் நம்பிக்கைக்கு முற்றுமாறாக அம் மறையோர். அத் தமிழ்மறையினை அழித்தொழிக்கக் கரவுள்ளங் கொண்டனர். ஒருவர்க்கும் புலனாகாப் பாழ்ங்குழியில் புதைத்து மறைத்தனர். அரும்பாடுபட்டு அபய குலசேகர மன்னன் திருவருள் துணையால். அந்தண நம்பிவழித் தமிழ்மறை இருக்கும் இடம் ஓர்ந்தனன். அந் நம்பியுடன் சென்று வினவினன். அஞ்சாநெஞ்சம் படைத்த அவ்வஞ்சகர் மன்னனையும் மயலாக்கி ஏமாற்றப் பெரும்புனைவொன்று சித்திரிப்பாராயினர். அது வருமாறு: அம் மூவர் கையடையாளமிட்டுப் பூட்டப்பட்டிருக்கிறது. அம்மூவர் வந்தால் அவ் அறை திறக்குமென்று மொழிந்தனர். அவ்வுண்மை வருமாறு: "அத்தகையோர் தமிழ்வைத்த மூவர் வந்தால் அறைதிறக்கு மெனவுரைக்க அரசன் றானும் மெய்த்தகுசீர் அம்பலவர்க் குற்ற செல்வ விழாவெடுத்து விளம்புதமிழ் மூவர் தம்மை உய்த்தணிவீ தியினுலா வருவித் தும்பர் நாயகன்றன் கோயில்வல மாக்கி யுள்ளே சித்தமெலா முருக்குதமி ழிருக்கை சேரச் சேர்த்தியவர் சேர்ந்ததெனச் செப்பி நின்றான்." (திருமுறைகண்ட புராணம். 19.) தமிழ்மறைப் பெருமையுணர்ந்த தமிழ்மன்னன் வேறென் செய்வன்? தேவாரத்தைச் சிறை செய்த மறையோர் சூழ்ச்சி நிறைவுறாது குறைவுற்றுச் சிதைந்து தேய்வதாயிற்று. தேவாரங்கள் வெளியெடுத்துத் திருவருளால் போற்றப்பட்டன.
|