எட்டாந் தந்திரம் இது பேற்று வழிபாட்டாற் பெறப்படும் பேருறுதி வகுப்பதாகும் இஃது ஐஞ்ஞூற்றுப்பதினெட்டுத் திருப்பாட்டுக்களையுடையது. இஃது உடலிற் பஞ்சபேத முதல் சோதனை ஈறாக முப்பத்துமூன்று பிரிவுகளையுடையது. உடலின் பாகுபாட்டை உற்றுரைப்பார் உடலிற் பஞ்சபேதமென்றனர். அவை 'நோக்குபரு மைநுண்மை போர்வைமீ நுண்முன்மை, ஆக்குமுடல் ஐந்தாம் அறி' என்றதானல் பருவுடல், நுண்ணுடல், போர்வையுடல், மீநுண்ணுடல், முன்மையுடல் என உடல் ஐவகைப்படும். போர்வை - கஞ்சுகம். மீநுண்மை - அதி சூக்குமம். முன்மை - முதல்; காரணம் இவ்வுடல்கள் அழியும் தன்மையன. இவற்றிற் பல்வேறு அவத்தைகளாகிய பாடுகள் உள்ளன. இப் பாடுகளினால் அறிவுதோன்றும். அவ்வறிவினால் அறிவின் மெய்யியல்பு (2318) கைவரும். அறுவேறு முடிபுகளும் (2329) வெளிப்படும். வெளிப்படவே, விரவுதலால் பதி பசு பாசம் வேறன்மை (2367) புலனாகும். புலனாகவே அடிதலை யுண்மை வெளிப்படும். வெளிப்பட முக்குற்றம் புலனாம். புலனாக முப்பதம், முப்பரம், அப்பாலியல்பு, முத்தூரியம், மும்முத்தி, முச்சொரூபம், முக்கரணம், முச்சூனியம், முப்பாழ், காரியகாரணவின்னல், வேண்டுதல் வேண்டாமை இன்மை, சிவனுண்மை தேறாது புறங்கூறல், எண்புலத் காவலர், ஒன்பான் நிலை, தூய்மை, முத்திப்பழிப்பு, மும்மையிலக்கணை முதலியன தெளிவுறும். தெளியவே முப்பத வுண்மை விளங்கும். விளங்கவே எல்லாம் விழுங்கும் சிவனியல்பு (2548) புலனாம். புலனாகப் பொய் யொழிந்தார்க்கு அவன் புகலிடம் (2558) என்பது போதரும். போதரவே மெய்யுணர்ந்தார் செயல் (2567) வெளிப்படும். வெளிப்படவே பசைமலமாம் அவாவறுத்தல் (2570) உண்டாகும். அவாவறவே அடியார்க்கு அடியராம் (2578) பத்தியுண்டாம். அப் பத்தியின் பாலதாய் விளைவது முத்தியாகும். முத்தியின் பெறுபேறு செயலற்றிருக்குந் திருந்திடம். இதனைச் சோதனை எனவுங் கூறுப. இவ் வெட்டாந் தந்திரம் பத்தியின் பாலராய் முத்திபெற்ற ஆளுடைய அடிகளாகிய மணிமொழியார் திறத்துடன் ஒருபுடை யொப்பதாகும். இத் தந்திரந்தின்கண் முத்தியும் பத்தியும் முத்தி நிலையும் வலியுறுத்துள்ளமையும் மேலதனை உறுதிசெய்யும். ஆளுடைய அடிகள் அருளியதும் எட்டாந் திருமுறை என்னும் எண்ணொற்றுமையுநோக்குக. இவ்வுண்மையினை வரும் திருப்பாட்டான் உணர்க: "முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே" (8. அச்சோப்பதிகம், 1.)
|