பக்கம் எண் :

1301
 

மருள்வழியொழுகும். பழிபெருகு வழுச்செயல் அழிந்தொழிவது எஞ்ஞான்றுகொல்லென ஆன்றோர் வருந்துகின்றனர். சொற்றமிழ் - சிறந்தெடுத்துப் புகழப்படும் தமிழ்; உலகியல் வழக்கியல், வழக்கிலும் பயின்று உரைபெறும் தமிழ். நம்பியாரூரரின் நடைமுறையனைத்தும் ஒருபுடையொப்பாக இவ்வேழாந் தந்திரத்தோடிணைந்தனவாகும். அவ்வுண்மையினைத் தனி நூலாக அமைத்தல் வேண்டும். ஈண்டு ஒரு திருப்பாட்டினை மட்டும் குறிப்பாக எழுதி அமைகின்றாம் :

"பாசத்தி லிட்ட தருளந்தப் பாசத்தின்
நேசத்தை விட்ட தருளந்த நேசத்திற்
கூசற்ற முத்தி யருளந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே."

(10 - 1771.)

மேலும் ஆருயிரின் அடிமை ஆவணக் குறிப்பும் என் தாயோ (1839) டெனத் தொடங்கும் இத் தந்திரத் திருப்பாட்டானே காணப்படும் பொருத்தமும். ஓர்கூ ஆரூரரின் அடிமை ஆவணம் செந்தமிழின்கண் அமைந்ததும் அயன்மொழியாகிய ஆரியத்தின்கண் அமையாமையும் உற்றுநோக்கின் தமிழ்நாட்டில் எல்லாம் தனித் தமிழாலேயே நடப்பதுதான் சிவபெருமானுக்கு இனித்தமுடைய செயல் என்பது எனைத்தோர் ஐயுறவிற்கும் இடனின்றிப் போதரும். மேலும் பாணபத்திரர்க்கு ஆலவாயில் மன்னிய சிவபெருமான் சேரர்பெருமானுக்கு விடுத்த திருமுகப் பாசுரம் இருவகை வழக்கிலும் பொன்றாச் செந்தமிழில் நின்று நிலவுவதும், பெத்தான் சாம்பானுக்குப் பேறருளும் பொருட்டுக் கொற்றங்குடியார்க்கு அடியார்க்கு எளியராம் சிற்றம்பலனார் எழுதிய கைச் சீட்டும் செந்தமிழே. சேரமான் பெருமாள் நாயனார் இந்நிலவுலகத்து மட்டுமின்றித் திருக்கயிலையில் பாடி அரங்கேற்றியுள்ளதும் உரமருள் ஒண்மை நற்றமிழே. நற்றமிழின் முழக்கம் சொற்பெறு கயிலையிலும் உண்டு. ஆனால் அற்புறு நிலவுலகில் நிலவிப் பெரும்பயன் அளித்தற்குரிய திருக்கோவில்களில் அஃதில்லை. இஃதென்ன புதுமையென்று நம்மை நாமே வினவி மனம் நைந்து அமைதல்வேண்டும். இஃது 'இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர், மனம்போன்று வேறுபடும்' என்னும் வாய்மைச் செந்தமிழ் வைப்பாம் பொதுமறையின் எடுத்துக்காட்டாக அடுத்துளோர் செய்யும் மறைமுக அடாச் செயலால் நிகழும் குறையெனக் கூறுவது நிறையெனும் நேர்மையாகும். சிவஞான சித்தியார் பரபக்கம் சௌத்திராந்திகன் மறுதலை இருபத்துநான்காம் பாட்டின்கண் வரும் 'ஆரியமாய்' என்பது ஆசானால் செய்யப்பட்டதாயென்பது பொருள். ஆரியன் - ஆசான். ஆரியம்: ஆசானால் செய்யப்பட்டது, தொல்காப்பியம் என்பது போன்று.