புறச் சமயத்தார் கைக்கொண்டடொழுகும் சமய ஒழுங்குகள் யாண்டும் ஒன்றுபோல் அமைந்து ஒற்றுமைநலங் காட்டுகின்றன. அகச்சமயத்தையும் உள்ளடக்கிப் பிணக்கம் ஒரு சிறிதும் இன்றி இணக்குவித்துக் கொண்டிருக்கும் சித்தாந்தப் பெருநெறி ஒரு ஒழுங்குட்பட்ட விழுமியநெறி போன்று தெளியப் புலனாகாமல் மழுங்கி நிற்கின்றது. தெய்வத்தன்மை வாய்ந்த இத் திருமந்திர மாலை என்னும் ஒரு நூலே ஏனைய இருபத்தைந்து நூற்களுக்கும் முதனூலாய்க் கருவூலமாய்ச் செந்தமிழ்மறை முறையாம் வேதாகமமாய் விளங்குகின்றது. அவ் விளக்கம் மேல் விரித்துக் கூறினாம். அதனால் இவ் வொரு நூலைத் தாய்நூலகவும், ஏனைய இருபத்தைந்தினையும் சேய்நூலகவும் மற்றைய அருள் நூல்களைத் துணை நூல்களாகவும் கொண்டு ஓதியும் ஓதுவித்தும் வருதல் சால்புடைத்தாகும். ஆளுடைய பிள்ளையார் அருளிய "வையக முந்துயர் தீர்கவே" என்னும் தமிழ்மறையின் வேறோருருவே' நான் பெற்ற இனபம் பெறுக இவ் வையம்' (147) என்னும் திருமந்திரத் திருப்பாட்டு. இத் திருமந்திரமாலையினை வழிப்பேற்றினராம் வானவர் திருமுறையோடு சேர்த்துச் சிறப்புற ஓதிச் சிவனை வழிபடுவர் என்பது 'பிறப்பிலி' (148) என்னும் திருப்பாட்டால் தெளிவுறுத்தப்பட்டுள்ளது. அங்ஙனமாயின் நாம் ஓதி வழிபடுதல் வேண்டுமென்பது எத்துணை இன்றியமையா இயற்கையெனக் கூறாமே புலனாகும். மேலும் சிறப்புப் பாயிரம், திருமந்திரத் தொகைச் சிறப்புள் இரண்டாவது திருப்பாட்டு வருமாறு: "மூலம் உலைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறித் தோதிடின் ஞாலத் தலைவியை நண்ணுவ ரன்றே." நம்பிரான் மூலர் வாயிலாக வெளிப்போந்து அவர் உரை செய்தருளிய தெய்வத்திருத் தமிழ் ஒரு மூவாயிரம் என்ப. உண்மையான் நோக்குவார்க்கு அது நந்தியருளிய அருளிப்பாடாகும். இவ் வருளிப்பாட்டை. 'பழுதிலிறை எழுது மொழியெனவும்' 'விழுமிய தமிழ் முனிவன் மூலன் வழிமொழிகள்' எனவும் வழங்குவதே வாய்வதாகும். இறை எழுது மொழி யென்பது தெய்வத் திருவருள் கைவந்த அடிச் சார்ந்தார் அருளுணர்வகத்துப் பொருண் மொழிகள் வெளிப்படுதற்கு வேண்டும் முதலாம் நுண்ணோசையினை மிக நுண்ணிதாக எழுப்புவது வழிமொழிகள் என்பது தஞ்செயலற்றுச் சிவனார் திருவருட் செயலாய் வந்தவாறே வாய் மொழிவது இவ் வுண்மை வரும்
|