ஆளுடைய பிள்ளையார் திருப்பாட்டான் உணர்க: "பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே" (3. 67 - 12) அங்ஙனம் வெளிப்போந்து திருவருள் நினைவால் ஞாலத்தார் அறிந்து ஓதிச் சிவபெருமானை இத் திருமந்திரத் திருப்பாட்டால் வழிபட்டு உய்யும் நெறி உணர்தற்கேயாம். இதுவும் பிள்ளையாரருளிய "ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென். ஆலவாயிலுறையுமெம் மாதியே" (3. 111 - 1) என்னும் அருளிப்பாட்டால் இனிது விளங்கும் 'காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்' என்பது, ஒவ்வொரு நாளும் வைகறையிலெழுந்து செய்வன செய்து சிறப்புடனிருந்து ஓதினால் என்பதாம். அதனையே இரட்டுற மொழிந்து வழிபாட்டிற்கு என வகுத்த காலங்கள் தோறும் அதற்கு வேண்டும் துணைப்பொருள்களுடன் எழுந்து திருமந்திர மாலைத் திருப்பாட்டினை வழிபடுவார் அனைவர்களும் கருத்துணருமாறு ஓதி வழிபாடு செயின் எனக் கூறுதலுமாம். இப் பொருட்குக் காலை - காலம்; ஐ: சாரியை, அம்: கடைக்குறை. கருத்தறிந்து - கருத்தறிய: எச்சத் திரிபு. ஓதிடின் - ஓதி வழிபட்டால்: சொல்லெச்சம். வழிபடுதற்குரிய திரு இடங்கள் எல்லார்க்கும் இன்ப நலம் எளிதிற் பயிற்றுமிடமாம் திருக்கோவில்களும், பயிற்றுவிக்கும் பான்மை வாய்ந்த நல்லார் பல்லோர் நாளும் பயிலும் நல்லுறையுளாம் திருமடங்களும், சொல்லார் தொழுகைக் கூடங்களும், வல்லார் வாழும் நல் இல்லங்களும் பிறவுமாம். வழிபாட்டினுக்குரிய காலம் நான்கு. அவை, காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு என்பன. இவ் வுண்மை வரும் அம்மையார் திருவெண்பாவானுணரலாம்: காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின் தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு வீங்கிருளே போலு மிடறு: (11. அற்புதத் திருவந்தாதி, 65) இந் நான்கு பொழுதுகளும் ஒரு புடையொப்பாக அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றையும்; சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பனவற்றையும் விழைவார் வேண்டி வழிபடப்படும் விழுப் பொழுதுகளாகும். இத் திருமந்திரத் திருப்பாட்டுக்கள் அனைத்தும் வெண்டளை பிழையாது ஈராறெழுத்தாகிய பன்னிரண்டின் மிகாக் கட்டளை பெற்று விளங்குகின்றன ஒழுகிய இன்னோசையுடையன. இத்தகைய யாப்பொன்றே இதன் காலத் தொன்மையைச் சால விளக்கும் பெற்றி வாய்ந்தது.
|