பக்கம் எண் :

1311
 

இப் பன்னிரண்டென்னும் எழுத்தமைப்பு நம் செந்தமிழ் மொழியின் உயிர் பன்னிரண்டினையும், திருமுறை பன்னிரண்டினையும் மெய்கண்டார், தமிழ் நூற்பா பன்னிரண்டினையும் வரை செய்துணர்த்தும் வாய்மை பெரிதும் போற்றிப் புகழ்தற்குரியது. இதுபோன்று முன்னும் பின்னும் ஓதும் முதுமறை 'திருச்சிற்றம்பலம்' என்பதாகும். அவை அவ்வாறெழுத்துக்களாலாயவை. எனவே அவை இரண்டு கூடிப் பன்னிரண்டாகும். இவையும் மேலவற்றை வலியுறுத்தும் மேம்பாட்டினவாகும். எழுத்துச் சுருக்கம் இயற்சீர் வெண்டளையான் வரும் வெண்பாவில் மட்டுந்தான் காணப்படும். அதுவும்பன்னிரண்டெழுத்தேயாம். அகவலின்கண் இதனினும் எழுத்துச் சுருக்கம் காணப்படினும் அஃது அடிவரையறைசேர் பாட் டெண்ணிக்கையை உடையதன்று. அப்பரடிகள் அருளிய செப்பருந் திருக்குறுந் தொகை நேர் பதினொன்றும் நிரைபன்னிரண்டுமாகக் காணப்படினும் முதலயற்சீர்களே வெண்டளை விரவி வருகின்றன. இத்தகைய பெருநூலுக்குத் தவத்தான் மனந்தூயராய், முக்குணமும் கடந்து தக்க எண் குணமும் சார்ந்து சார்ந்தோர்க்கருளும் சான்றோராய்த், திருவடியுணர்வு கைவந்த சிவந் திருவினராய்த், திருக்குறள் மிக்க திருமுறை சித்தாந்தம், உருக்கு தொல்காப்பிய நூல் ஓதும் ஒண்மையராய், இவற்றின் வாய்மைகளை வரையாது வழங்கும் வண்மையராயத், தண்ணளி வாய்ந்த எண்மைப் பொலிவினராய், அருள் திருமேனியராய் உள்ளாரே பொருளுரைக்கும் பொற்பினராவர். ஒன்றுக்கும்பற்றா நாயேனைக் கருவியாகக்கொண்டு திருவருள் இத் தொண்டினை முற்றுவிக்க முன்னியது மேற்கூறிய தக்கார் முன் வந்து மிக்கதோர் விழுமியவுரை அருளுதற்குத் தூண்டுந் திருக்குறிப்பாகும். இதன்கண் காணப்படும் குற்றம் பொறுத்து அடியேனை ஆட்கொள்ளுமாறு பணிவுடன் பன்முறையும் வேண்டுகின்றேன்.

"கந்தமலர்க் கொன்றையணி சடையான் தன்னைக் கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச் சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே."

(அப்பர், 6. 84 - 4.)