மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் ஞாலத் தலைவியை நண்ணுவ ரன்றே. திருமூலநாயனா ரருளிச்செய்த மூவாயிரந் தமிழும் உலகமுய்ய நந்தி யருளியதாகும். ஒவ்வொருநாளும் வைகறைப்பொழுதிலும் மற்றைய பொழுதுகளிலும் சிவகோலத்துடன் எழுந்து பொருளுணர்ந்தோதுவார் திருவருள் கைவந்தோராவர். (2) வைத்த பரிசே வகைவகை நன்னூலின் முத்தி முடிவிது மூவா யிரத்திலே புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது வைத்த சிறப்புத் தருமிவை தானே. இம் மூவாயிரந் தமிழும் ஒன்பது தந்திரப்பகுப்பில் நான்கு பொதுவும் ஐந்து சிறப்பாக நின்று வீடுபேற்றை நல்கும். (3) அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள் ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச் சுத்தமதாக விளக்கித்1 தெளிக்கவே முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. திருவடிப்பேறு பெற்ற செந்நெறியாளர், செம்பொருட்டுணிவினர் என்னும் சிவனடியார்தம் திருவடி விளக்கிய திருத்த நீரே புதுமை வாய்ந்த சிவதீர்த்தமாகும். இதுவே ஒன்பான் தீர்த்தமெனலு மொன்று. (4) வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண் அத்தன் அயன்மால் அருந்திய அன்னமாம் சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. சிவனடியார் உண்டருளிய திருவமிழ்து மூவராய் நின்றிலங்கும் சிவபெருமான் உண்டருளியதாகும். அவ் வமிழ்த எச்சம் உண்ணும் பேறுடையார் திருவடியின் பெய்துவர். இது திருமூலர் ஆணை மொழியாகும். (5) சிறப்புப்பாயிரம் முற்றும் 1. விருப்பினால். 12. சம்பந்தர், 1234. |