உ திருச்சிற்றம்பலம் சிறப்புப்பாயிரம் (அ) குருமட வரலாறு வந்த மடமேழும் மன்னுஞ்சன் மார்க்கத்தின் முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம் சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே. ஏழு திருமடங்களும் நிலைபெற்ற நன்னெறியினைப் போதிப்பனவே, அவற்றுள் சிறந்து காணப்படுவது திருமூலர் திருமடமாகும். அதன் வழி இவ் வொன்பது தந்திரமும் அவற்றிற்குரிய மூவாயிரம் திருமந்திரமும் வெளிப்போந்தன. இவற்றைத் திருமூலராகிய சுந்தரர் அருளிச் செய்தனர். அதனால் இதற்குச் சுந்தர ஆகமம் எனவும் ஒரு திருப்பெயருண்டு. (1) கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர் நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர் பலங்கொள் பரமானந் தர்போக தேவர் நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே. இறைவன் திருவருளால மெய்யுணர்வு கைவந்த வழிவழித் தவத்தோர் காலாங்கர், அகோரர், மாளிகைத்தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகதேவர், திருமூலர் என ஏழு தமிழ் முனிவராவர். (2) (ஆ) திருமந்திரத் தொகைச் சிறப்பு மூலன் உரைசெய்த முப்ப துபதேசம் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் மூலன் உரைசெய்த மூன்றுமொன் றாமே. திருமூல நாயனார் அருளிச்செய்த திருப்பாட்டுக்கள், முப்பது உபதேசம், முந்நூறு மந்திரம், மூவாயிரம் தமிழ் ஆகிய இம் மூன்றும் ஓர் உண்மையினை உரைத்தருளும் கருத்தொன்றாகும். மேலும் இம் மூவாயிரத்தின்கண் ஆயிரத்துக்குப் பத்து விழுக்காடு உபதேசம் எனவும், நூற்றுக்குப் பத்து விழுக்காடு மந்திரமெனவும் ஏனையவை இவற்றை விளக்கும் விரிவெனவுங் கொண்டு ஆய்தலும் ஒன்று. (1)
|