பக்கம் எண் :

1345
 

மேலும், திருமுறைகளை வகுத்த நம்பியாண்டார் நம்பிகள் "முழுத் தமிழின்படி மன்னும் வேதத்தின் சொற்படியே" நம் திருமூலர் பாடினதாகத் தம் அந்தாதியில் கூறியுள்ளதையேனும் அனைவரும் கூர்ந்து நோக்கினால் உண்மை வெளியாகும்.

மேலும், நம் சேக்கிழார் பெருமான் "ஒன்றவன் தானே எனவெடுத்துத்" திருமூலர் தம் நூலைத் தொடங்கினார் எனப் பாடியுள்ளார். "ஒன்று" என்ற சொல்லில் தமிழுக்கே சிறப்பான 'ற' கரம் உள்ளதால் அச்சொல் - வேறு மொழியாயிருக்க நியாயம் சிறிதும் இல்லை.

ஆதலின் தமிழ் மூவாயிரம் என்னும் நூலானது மொழி பெயர்ப்பு நூல் அன்று என்பது காட்டப்பட்டது.

(1) நூற்பயன்

ஒரு நூலின்கண் நூற்பயனைக் கூறவேண்டும் என்னும் இலக்கண விதியின்படி, நம் திருமூலரின் மாணாக்கர்கள் கூறிய சிறப்புப் பாயிரத்தில் நூற்பயனும் கூறப்பட்டிருக்கிறது. அப்பாடல்களாவன:

"மூலன் உரைசெய்த மூவா யிரம்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி யருளது
காலை எழுந்து கருத்து அறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே."

"வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே."