ஈண்டுக் காமம் : பன்மனைவியரை மணத்தலும், ஒரு மனைவிமாட்டும் (ஒத்த நிலையினராய்ச் சிவன் நினைவினராய் மகப்பேற்றின் பொருட்டுக் கூடுவதே காதற்கூட்டம்.) காதன்முறையின்றிக் கூடுவதும் காமக்கூட்டமாகும். அருவப்பொருளில் அன்பு செல்வது காதல். உருவப்பொருளில் அன்பு செல்வது காமம். காதல் உயிரின்மாட்டும் காமம் உடம்பின் மாட்டும் செல்வன். காதற் கூட்டமின்றிக் காமக்கூட்டம் கூடுதலும் காமம் ஆம் களவு : தான் ஒழுகவேண்டிய ஒழுக்கமுறைகளைத் தவிர்ந்தும், நினைப்பூட்டியும் செய்வனவும், தன் தேவைக்குமேல் பண்டங்களைத் தொகுத்துவைத்தலுமாம். பண்டங்கள் ஊண், உடை, உறையுள் முதலியன. கொலை: தன்னுயிர் பிறப்பற்றுச் சிறப்புற முயலாது முயலும் முயற்சி கொலையாகும். நிலைமை - உறுதியுடைமை. காமம் கொலை களவு - இம் மூன்றும் அகற்றல். ஈரைந்தும் - குறித்தபத்தும். (அ. சி.) நேமி - நியமத்தை உடையவன். (2) 539. தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ் சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து நிவம்பல செய்யின் நியமத்த னாமே.1 (ப. இ.) 'உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை'யாகிய தவமும், திருவைந்தெழுத்தைக் கணித்தலாகிய செபமும், சிவனை நினைத்தலாகிய மகிழ்வும், முப்பொருளுண்மை கைக்கொள்வதாகிய மெய்ப்பொருள் ஆத்திகமும், சிவனடியார்களுக்குப் பணிந்து உள்ளன. உவந்து கொடுக்கும் தானமும், சிவனை வழிபடும் விரதமும், செந்தமிழ்த் திருமுறை சித்தாந்த நூல்களை ஓதலும், ஓதுவித்தலும், கேட்பித்தலும், கேட்டலும், நாடலும் முதலிய நயனார் மெய்யுணர்வு வேள்வி ஐந்தும் செய்தலும், திருவைந்தெழுத்தால் ஓம்பும் அகத்தழலும், திருவைந்தெழுத்தால் புரியும் அகப்பூசையும், அருளால் சிவனை மறவா நினைவால் உறவெனக் கொள்ளும் ஒண்மதியும் என்று சொல்லப்படும் பத்தும் நத்தும் நன்றாற்றலின் வித்தாகும். சந்தோடம் - மகிழ்ச்சி. ஆத்திகம் - கடவுட் கோள். (அ. சி.) சித்தாந்தக் கேள்வி - சைவ சித்தாந்த நூல்களிற் கூறும் பொருளைக் கேட்டல். மகம் - விருந்து முதலிய ஐம்பெரு வேள்வி. நிவம் - நிபம். இவை போன்ற நற்செயல்கள். (3)
1. ஞானநூ. சிவஞானசித்தியார், 8 : 2 - 13.
|