4. ஆதனம் (இருக்கை) 540. பங்கய மாதி பரந்தபல் ஆதனம் அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள் சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத் தங்க இருப்பத் தலைவனு மாமே. (ப. இ.) தாமரை இருக்கை முதலாக இருக்கை பலதிறப்படும். அவற்றுள் எண்பேரிருக்கை நனிமிகச் சிறந்தன. அவ்வெட்டனுள்ளும், குற்றங்குறை ஏதும் இல்லாத இருக்கை, எல்லாரானும் ஒல்லும் வகை கைக்கொள்ளப்படும் இருக்கை சுவத்திகம் என்ப. சுவத்திகம் என்பது தொடைக்கும் முழங்காற்கு நடுவே இரண்டு உள்ளங்காலையும் செலுத்தி இறுமாந்திருப்பது. சுவத்திக ஆதனம் - இறுமாப்பிருக்கை. பங்கயமாதி - தாமரை இருக்கை முதலாக. இருநாலு மவற்றினுள் - அவற்றினுள் இருநாலுமென மாறிப் பொருள்கொள்க. (அ. சி.) சொங்கு - சொக்கு என்பதன் மெலித்தல்; குற்றம். சுவத்திகம் - எது சரிப்படுகிறதோ அது; சுகமானது. (1) 541. ஓரணை யப்பத மூருவின் மேலேறிட் டார வலித்ததன் மேல்வைத் தழகுறச் சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் பார்திகழ் பத்மா சனமென லாகுமே. (ப. இ.) பத்மாதனமாகிய தாமரை இருக்கை : இரண்டு கால்களையும் மாற்றித் தொடைமேல் உள்ளங்கால் மலர்ந்திருக்குமாறு வலித்திழுத்துவைத்தல் வேண்டும். பின்பு அம் மலர்ந்த கால்களின்மேல் இருகைகளும் கோத்து மலர்ந்திருக்குமாறு வைத்தல் வேண்டும். நன்றாய் நிமிர்ந்திருந்து நேர்முகமாக நோக்குதல் வேண்டும். இதுவே பத்மாசனமாகும். அணை - ஓரம். (அ. சி.) ஊரு - தொடை. (2) 542. துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து அரிய முழந்தாளி லங்கையை நீட்டி உருசி யொடுமூடல் செவ்வே யிருத்திப் பரிசு பெறுமது பத்திரா சனமே. (ப. இ.) பத்திராசனமாவது : குற்றமற்ற வலக்காலை வெளித்தோன்றுமாறு இடத்தொடையின்மேல் வைத்து இரண்டு முழந்தாள்களிலும் அங்கைகளை மேனோக்குமாறு அமைத்து நீட்டி உடம்பைச் செவ்வையாக நிமிர்ந்திருக்குமாறு செய்து பயிறல் பத்திராசனமாகும். இவ் விருக்கையால் உடல் தளர்ச்சியின்றிக் கிளர்ச்சியுடனிருக்கும்.
|