பக்கம் எண் :

247
 

(அ. சி.) துரிசில் - குற்றமற்ற. உருகியிடும் உடல்-நெகிழும் உடல்.

(3)

543. ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை களில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே.

(ப. இ.) பாதங்கள் இரண்டையும் மாற்றித் தொடையின்மேல் ஏறுமாறு செய்தமைத்து, உடம்பின் பளுவை முழங்கை தாங்குமாறமைத்து அசைவின்றியிருத்தல் கோழியிருக்கையாகும். முக்கி - அழுத்தி; முங்கியென்னும் திசைச்சொல்லின் திரிபு. குக்குட ஆசனம் - கோழி இருக்கை.

(அ. சி.) துளங்காது - அசையாமல்.

(4)

544. பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

(ப. இ.) முழந்தாளின்மேல் பாதத்தை வைத்து அவற்றின்மேற் கைகளை நீட்டி, விருப்புடன்மேல் நோக்கி, குற்றமற்ற கண்கள் மூக்கின் நுனியை நோக்குமாறு இருப்பது சிங்காதனமாகும். சிங்காதனம் - அரிமா இருக்கை.

(அ. சி.) பாணி - கை. கொடி மூக்கு - மூக்கு நுனி.

(5)

545. பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.

(ப. இ.) பத்திரமுதல் சுகாதனம் ஈறாகச் சொல்லப்படும் இருக்கை ஏழும் மேலானதாகச் சொல்லப்படும், மாமுது ஆசனமும் சேர எட்டாகும். மாமுது ஆசனம் - சுவத்திகம். இவற்றுடன் சொத்திரம் சுகாசனம் கூட்டப் பத்தாகும். இப்படியே எட்டெட்டு ஆகிய அறுபத்து நான்கு, நூறு முதலிய இருக்கைகள் அளவில்லன. திருமூலநாயனார் ஓதியருளிய இருக்கை எட்டேயாம். எனினும் பிறர் கொள்கைகளைக் கூறும் முறையில் பிறவும் கொள்ளப்பட்டன. இஃது எழுவகை மதங்களுள் ஒன்றாகிய 'உடம்படல்' என்னும் முறையாகும்.

(6)