5. பிராணாயாமம் (வளிநிலை) 546. ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாதுபோய்ப் பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.1 (ப. இ.) ஐவர்களாகிய ஐம்பொறிகட்கும் தலைவன் ஆருயிராகும். ஐம்பொறிகளையும் உறுப்பாகக்கொண்டு உடல் உறுப்பியாகத் திகழ்கின்றது. அதனால் அவ் வுடலை ஐவர் வாழும் ஊரென்றனர். அவ்வூர்க்குத் தலைமகன் மனம். அத் தலைமகன் நாயகனாகிய ஆருயிராம் தலைவன் உய்யுமாறுகொண்டு ஊரும் குதிரை ஒன்று உண்டு. குதிரை ஈண்டு உயிர்ப்பு. உயிர்ப்பு எனினும் பிராணவாயு எனினும் ஒன்றே. மெய்ம்மையாக அகத்தவப்பயிற்சி யுடையார்க்கு அம் மனமாகிய குதிரை அடங்கிப் பற்றுக்கொடுத்து ஒழுகும். முறையான பயிற்சியில்லாத பொய்யர்க்குப் பற்றுக்கொடாது துள்ளி எழுந்து அவரைக் கீழே வீழ்த்தித் தான் வேண்டியவாறு ஆர்வத்துடன் சென்றுவிடும். (அ. சி.) ஐவர். ஐம்பொறிகள். ஊர் - உடல். தலைமகன் - மனம் குதிரை - பிராணவாயு. பற்றுக்கொடுக்கும் - வசப்படும். துள்ளி விழுத்திடும் - வசப்படாது. (1) 547. ஆரிய னல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே. (ப. இ.) குதிரையைச் செலுத்தும் ஆரியனாகிய மனத்தோன் நல்லவன். குதிரையாகிய உயிர்ப்பு இருவகை. ஒன்று வலப்பால் நாடி; மற்றொன்று இடப்பால் நாடி இவற்றை முறையே பிங்கலை இடைகலை என்ப. அவ்வுயிர்ப்பினை விடுத்தலும் எடுத்தலும் ஆகிய செயலைப் போன்று தடுத்தலைச் செய்வதாகிய வீசிப்பிடிக்கும் வழி யறியாது மயங்குகின்றனர். திருவருள் வலத்தால் நன்னெறி நான்மைவழி யொழுகினால் சிவகுரு எழுந்தருளிவந்து ஆட்கொள்வர். அவரின் திருவருள் பெற்றால் அக் குதிரையாகிய உயிர்ப்பினை வயடுப்படுத்துதல் எளிதாகும். ஆரியன் - பெருமைமிக்க மனம். விரகு - உபாயம்; முறைமை. கூரிய - நுண்ணிய அறிவுள்ள. வாரி - சேர்த்து. (அ. சி.) ஆரியன் - மிலேச்சன். குதிரை இரண்டு - இடைகலை பிங்கலை விரகு-உபாயம். (2) 548. புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற் கள்ளுண்ண வேண்டாம் தானே களிதருந் துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே.
1. உயிரா. அப்பர், 6. 25 - 1. " ஊனி. சம்பந்தர், 3. 22 - 3. 2. காயத்துள் திருவுந்தியார், 43.
|