பக்கம் எண் :

253
 

(அ. சி.) இரேசகத்தால் உட்பதிவித்து - அளவுக்கு மீறி வாயுவை வெளியே விடாமல்.

(9)

555. இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.

(ப. இ.) வீடாகிய உடல் தளர்ச்சியுறாது வளர்ச்சியுறுமாறு அளவாக உயிர்ப்பினை விடுத்தல் செய்து உடலுக்குச் செழுமையும் கொழுமையும் வழுவின்றிக் கெழுமப் பத்துவகை நாடியினும் உயிர்ப்பினை எடுத்தல்வேண்டும். அங்ஙனம் எடுத்து வீணாகக் கழியும் உயிர்ப்பினையும் மலக்காற்றினையும் தடுத்து நிலைநிறுத்தலாகிய நட்டத்தினைப் புரிவோர்க்குப் பண்டு எழுதிய கணக்கின்படி நமன் வருவதற்கில்லை. ஒருவன் மூலபண்டாரத்தைச் செலவுசெய்யாது தான் தேடி உண்பித்தும் உண்டும் வருகின்றனன். அம்மட்டுமன்றி மூலபண்டாரத்தின்கண் நாளும் சிறுகச்சிறுகத் தன் ஊதியத்திலிருந்து பொருள் கூட்டித் தொகுத்தும் வருகின்றனன். இவ்வுண்மையோராது மூலபண்டாரம் இது காறும் செலவாகி முடிந்திருக்கும் என்று ஒருவன் கணக்குக்கூட்டினால் எவ்வளவு பிழையோ அவ்வளவு பிழையாகும் அகத்தவமாகிய யோகப் பயிற்சியுடையார்பால் கூற்றுவன் வாழ்நாட்கு அலகிடுதல். நாடிபத்து இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு என்பன.

(அ. சி.) வீடு இளகாது - சரீரம் தளராது. புட்டிபட - பருக்கும் படி. கொட்டிய - வீணாய்க் கழியும். நட்டம் இருக்க - நிலைநிறுத்த.

(10)

556. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

(ப. இ.) உள்ளிருந்து புறப்பட்டு வெளிப்போந்து மீண்டும் உட்புக்குத் திரிகின்ற உயிர்ப்பினை மூச்சுப்பயிற்சி முறைப்படி தடுத்து உள்நிறுத்தி அருளால் தூய்மையாக்கி ஒழுகவல்லார்க்கு உடம்பு பொன்மேனியாகும். உயிர்க்குயிராய் உடன்நின்று விளங்கும் பின்னற்சடைசேர் பெருமானும் மன்னிநிற்பதன்றிப் புறப்பட்டுப் போகான். அவன் போகானாகவே அவனுக்கு உடலாகிய ஆருயிரும் போகாது. ஆருயிர் நிற்கவே உடலும் அழியாது. நெறிப்பட - முறைப்படி. உறுப்புச் சிவக்கும் - (உறுப்பு சினை யாகுபெயராய் உடம்பைக்குறித்தது.) உடம்பு பொன்னிறமாம்.

(11)

557. கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே.