6. பிரத்தியாகாரம் (தொகைநிலை) 559. கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே. (ப. இ.) பிரத்தியாகாரமாகிய தொகைநிலைக்கண் அஃதாவது 'பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாமல், ஒருவழிப் படுப்பது தொகைநிலையாம'் ஆகலின் அகத்தவப் பயிற்சிமுறையான் சிவபெருமானை உணர்வின்கண் கருத்துறவைப்பது தொகைநிலை. அங்ஙனம் சிவபெருமானை அகத்தே கொள்ளக்கொள்ள அவன்றன் எண்குணப் பெருக்கமும் எண்மையிற் காணலாம். பழங்காலத்தே நனிமிகு கனிவுடன் செந்தமிழ்ப் பழமறை தேடித் திளைக்கும் சிவபெருமானை இந்நாள் நாமும் அகத்தே கண்டு இன்புற்று இருக்கலுமாகும். பண்டு - பழமை; தொன்மை. தேடியை - தேடப்பட்ட சிவபெருமானை. பழமறை - செந்தமிழ்த் திருநான்மறை. இருக்கலும் - மெய்யடிமையாய் வாழ்தலும். (1) 560. நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலம் தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர் தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின் கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே.1 (ப. இ.) கொப்பூழுக்குப் பன்னிரண்டுவிரல் அளவின் கீழுள்ளது மூலாதாரம். அம் மூலாதாரத்தைத் தூண்டித் தொழிற்படுத்தும் மந்திரம் இயற்கைச் செந்தமிழ் மறையாகிய 'ஓம்.' இம் மறையினையே ஆண்டு வரை செய்து நிலைநிறுத்துதல் வேண்டும். அதனைப் பலரும் அறிகிலர். திருவருளால் அதனையறிந்தபின் சிவபெருமானை அன்பால் அழைத்துக் கொள்ளுதல் வேண்டும். அழைக்கவே அவனும் வெளிப்பட்டு எழுந்தருளிக் குடியிருந்தருள்வன். மூலாதார எழுத்துக்கள் வ, ச, ஷ, ஸ என்பன என்றலும் ஒன்று. தாபிக்கு மந்திரம் - நிலைநிறுத்தும் ஓங்காரம். கூவி - அழைத்து. கொண்டு - அடிமைகொண்டு. (அ. சி.) நாபிக்குக் கீழே பன்னிரண்டங்குலம் - மூலாதாரம். (2) 561. மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற பாலித்த யோனிக் கிருவிரல் கீழ்நின்ற கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே. (ப. இ.) மூலாதாரத்திற்கு இரண்டுவிரல் மேலும், குறிக்கு இருவிரற் கீழும் உள்ள இடம் பாப்பிருக்கையாகிய வட்டக் குண்டலியாகும். அக் குண்டலியாற்றல் மிக்க அழகுள்ளதாய் உணர்வினுள் எழும் செஞ்
1. அடியேன். 8. குழைத்தபத்து, 2.
|