னால் புகழ்ந்து சொல்லப்பெறும் உன் பொன்மேனி சிவன் வயமாகும். அஃதாவது உன் நுகர்வனைத்தும் சிவன் நுகர்வாகும். கண்டத்தே - கழுத்திடமாக (விசுத்தி). பரவசம் - தன்னிழப்பும் தலைவன் உழப்பும் உழப்பு - இறைபணி. (அ. சி.) இரேகைச் சுடரொளி - கீற்றுப்போன்ற ஒளி. கோதில் குற்றமில்லாத. உன்மத்தம் - பரவசம். (5) 564. மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லுங் கருத்திது தானே. (ப. இ.) செல்வே நிமிர்ந்து நன்றாயிருந்து அயிர்ப்பின்றி உயிர்ப்பினை அடக்கி மூலத்துளையை வாலிதின் அழுத்தி அடைத்திருப்பாயாக. அதன்பின் உச்சித்துளையாகிய நடுநாடியின் முடிவிடமாம் மேலைத் துவாரத்தின்மேல் மனம் வைத்திருப்பாயாக. இம்முறையால் வித்தமிழ்தாகிய இந்திரியம் உடம்பெங்கணும் செறியும். வேல்போலும் கூரிய அமர்க்கண்ணை விழித்திருப்பாயாக. விழித்திருத்தல் என்பது புற நாட்டமுமின்றி உறக்கமுமின்றி அகநாட்டமுற்றிருத்தல். அங்ஙனமிருப்பதே வாழ்நாட்கு அலகாய் வயங்கொளி மண்டிலக்காலத்தை வெல்லும் கருத்தென்பதாகும். விடுமுறைநாட்களைச் சேர்த்துவைத்துள்ள பணியாளர் பின் ஆண்டுக்கணக்காய்ப் பணியின்றி ஊதியம் பெற்றுக் காலத்தை நீட்டிப்பிப்பது இதற்கு ஒப்பாகும். மேலைத்துவாரம் - புருவ நடுவிலுள்ள நடுநாடித் துளை. புருவநடு - ஆக்கினாசக்கிரம். நடுநாடி - சுழுமுனை. (அ. சி.) முக்காரமிட்டிரு - நிமிர்ந்து உட்கார்ந்து, மூச்சடக்கி அழுத்தி இரு மேலைத்துவாரம் - மூலத்துக்கு மேல் உள்ள துவாரத்தின் மேல்; இந்திரியம் தேகத்திற்குள் பரவும் வழி. (6) 565. எருவிடும் வாசற் கிருவிரன் மேலே கருவிடும் வாசற் கிருவிரற் கீழே உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே. (ப. இ.) எருவிடும் வாசலாகிய கழிவாய்க்கு இரண்டுவிரல் மேலும் கருவிடும் வாசலாகிய குறிக்கு இரண்டுவிரற் கீழும் உள்ள நிலைக்களம் பாப்பிருக்கையாகிய குண்டலிநிலையாகும். அந்நிலைக்கண் திருவருளே திருவுருவாகக்கொண்டு திகழும் பேரறிவும் பேரொளிப் பெரும்பிழம்பு ஒன்று ஒருருவாய்த் தோன்றும். அப் பிழம்பினை அருளால் உணர்விற் கண்டு ஓவாது நினைக்கவல்லவர்கட்குக் கருவாகிய பிறப்பினை விடுவிக்கும் அச் சிவப்பிழம்பு வெளிப்படக் கலந்து விளங்கிநின்றருளினன். கருவிடும் சோதி - வினைமுதற்காரணமாய் நின்ற சிவன். (அ. சி.) எருவிடும் வாசல் - மலத்தைக் கழிக்கும் மூலம். கருவிடும் வாசல் - இந்திரியம் வெளிப்படும் வழி. உருவிடு சோதி - பிறப்பினை ஒழிக்கும் சிவபெருமான். (7)
|