சொல்லப்படும் வடதிசை தென்திசை என்ற இரண்டனுள்ளும் சிறந்ததாகிய தென்திசைக்கு வேந்து நிறுவிய ஒப்பில்லாத வேந்தன் சிவபெருமான். வேந்தன் என்பது ஆருயிர்கட்குப் போகமீன்ற புண்ணியன் என்பதாம். தொன்மைத் தமிழரே சிவபெருமானை வேந்தன் எனவும் வழிபட்டனர். அவ்வுண்மை ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியத்தின்கண் 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' (தொல். பொருள் - 5) என்னும் நூற்பாவால் உணரலாம். இதன்கண் காணும் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள் கொள்வது ஒருவாற்றானும் ஒவ்வாது. மேலும் 'தென்பாண்டி நாடே சிவலோகம்', 'பாண்டி நாடே பழம்பதி' என்பன மணிமொழியார் திருமொழி. 'முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி' என்பது அப்பர் அருண்மொழி. அவன் ஒருவனே கூற்றுதைத்து ஆட்கொண்ட எண்குணவன். அவ்வுண்மை 'சிவத்தைப் பேணில் தவத்திற் கழகு' என்னும் ஒளவையார் செம்மொழியால் உணரலாம். அத்தகைய அமிழ்தினும் இனிய தமிழ் முழுமுதலை அவன் விழுமிய அருளால் வழிமொழிகின்றேன். (அ. சி.)தென்றிசைக்கு ஒரு வேந்தன் - தென்திசையிலுள்ள யமபுரத்துக்கு ஒப்பற்ற அரசனாகிய யமனை. நாற்றிசை கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு. மேற்றிசை - நாற்றிசைகளிலும் உயர்ந்த (பரிசுத்தமான) திசை அல்லது மேலே சொல்லப்பட்ட நான்கு திசைகளுள். (2) 3. ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென் றேத்திடு நாதனை நாள்தொறும் பக்கநின் றார்அறி யாத பரமனைப் புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே. (ப. இ.)சிவபெருமான் திருவருளோடும், அவ்வருளின் ஆணையுடனும், ஆருயிரோடும், மாயைகன்மங்களுடனும் கூடி இயக்குதற் பொருட்டு ஒப்பநின்றானை, பிறப்பு இறப்பு கேடு ஏதுமில்லாத கடவுளை, விண்ணவர், விண்ணவர்கோன் மூவர் முதலிய தேவர்களுக்கு உற்றுழி உதவ அருளால் வெளிப்பட்டுநின்று அருள்வோனை, பக்கமாய் உடனிற்பினும் அவனருளில்லாதாரால் அறியவொண்ணாத விழுப்பொருளை அவனருளால் அவனுட்புக்கு அவன் முன்நி்ற்ப நற்றவத்தால் நினைந்து போற்றிப் புகழ்வேன். (அ. சி.)நக்கன் - தத்துவங்களைக் கடந்தவன்; மலமில்லாதவன்; மாசில்லாதவன். உலப்பிலி தேவர் - பாவம் இல்லாத புண்ணிய பூமியாகிய தேவருலகத்தில் வசிக்கின்றவர்கள். ஒக்க நின்றானை - உயிர்களுடன் கூடவே நின்றவனை. (3) 4. சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை1 அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித்2தாமரை யானே.3
1. மைப்படிந்த அப்பர், 6. 97 - 10. 2. பிறை நிலாவிய. சம்பந்தர், 2. 106 - 7. 3. மண்முதல். சிவஞானபோதம், 6. 3 - 3.
|