ஆகும். விடாத - நீங்காத. பவனம் - உயிர்ப்பு. நடாவு - இயக்குகின்ற. சங்கநாதம் - சங்கொலி போலும் ஒலி. கடா - முருட்டுத் தன்மை. விடா - நீங்காத. கட்டுண்ணும் - அடங்கும். வீடுபடாதன - விடுபடாதன; நீங்காத. விடு - வீடு என முதல் நீண்டது. சங்கு - வெண்ணிறம் பொருந்திய சிறந்த முதன்மை வாய்ந்த இசைக் கருவி. பருகாரமுதம்: பருகு + ஆர் + அமுதம். (அ. சி.) மனபவனம் - மனமும் பிராணனும். கடா - முரட்டுத்தனம். வீடுபடாதன - நீங்காத. (30) 861. அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற் குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச் சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே. (ப. இ.) மதியமிழ்தப் பெருக்கு மிக்குவரும் ஆற்றங்கரையாம் புருவநடுவின்மேல் தோன்றும் குமிழியகத்து அறிவு, ஆற்றல், ஓசை, ஒளி (சிவம், சத்தி, நாதம், விந்து) ஆவி என்னும் சுடர் ஐந்தினையும் ஒருங்குகூட்டி நடுநாடிவழியாக உயிர்ப்பினைச் செலுத்தி உறைப்புடன் நிற்கவல்லார்க்கு உடம்பினின்று உயிரைப் பிரிக்கும் நமனுக்கு உட்படும் நலிவில்லை; கலை நாள் முதலியன கட்டுறுத்தும் பிணிப்பில்லை. அழியாது உடம்புடன் என்றும் இருப்பர். சமைய - பொருந்த. தண்டு - நடுநாடி. ஓட்டுதல் - செலுத்துதல். தரித்தல் - நிலைத்தல். கலை - நட்டு. நாள் - நாள்கோள். (அ. சி.) தற்சுடர் ஐந்து - சிவம், சத்தி, நாதம், விந்து, சீவன். சமைய - பொருந்த. (31) 862. உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந் தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத் தெண்ணீர் சமாதி யமர்ந்துதீ ராநலங் கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே. (ப. இ.) உண்ணீரமுதமாகிய மதியமிழ்தத்தின் பொருந்திய ஊற்றினைத் திருவருளின் துணைப் பயிற்சியால் திறத்தல் வேண்டும். திறந்து தெளிந்த அருட்குணம் வாய்ந்த திருவடியாகிய தாமரையை இடையறாது எண்ணுதல் வேண்டும். எண்ணி இன்புற அலைவின்றி உளம் தெளிந்த நிட்டையிருத்தல் வேண்டும். நிட்டையிருந்து, என்றும் நீங்காது நிலைத்துள்ள ஏற்றமாம் உணர்வு எனப்படும் திருவடியுணர்வாகிய கருத்துவழிச் சென்று உறைத்தல் வேண்டும். உறைக்கின் உயிர்ப்பானது பொதுவாகச் செல்லும் வலமூக்கு, இடமூக்குவழி அகன்று நடுநாடிவழியாக மாறும் என்க. தெண்ணீர் - தெளிந்த அருட் பண்பு. தெண்ணீர்ச் சமாதி - அலைவில்லாத தெளிந்த நிட்டை. தீரா நலக்கண் - திருவடியுணர்வு. கால் - உயிர்ப்பு. (அ. சி.) தீரா நலக்கண் - ஞானக்கண். (32)
|