பக்கம் எண் :

360
 

863. மாறு 1மதியுமா தித்தனு மாறின்றித்
தாறு படாமல்தண் டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.

(ப. இ.) உடம்பகத்துக் காணப்படும் ஞாயிற்று மண்டிலம் திங்கள் மண்டிலம் இயற்கையில் மாறுடையதாயினும் பயிற்சியால் மாறில்லாமல் பிரிவில்லாமல் இயைந்து நடுநாடியாகிய தண்டுடன் கூடினால் உடலுக்கு அழிவில்லை. நிலத்தின்மீது அழிவில்லாத திருவடிப் பேரின்பம் அளவின்றிப் பெருகும். அதற்குரிய வழிவகையும் இதுவே.

(அ. சி.) மாறும் - மாறுபட்டிருக்கின்ற. தாறுபடாமல் - பிரிவில்லாதபடி. தண்டோடு - வீணாத்தண்டூடே. ஊறுபடாது - கெடாது. பாறு படா - அழிவில்லாத.

(33)

மூன்றாம் தந்திரம் முற்றும்.


(பாடம்) 1. மதியும் மதித்திரு