நான்காம் தந்திரம் [சிந்தாகமம்] 1. அசபை (பேசா எழுத்து) 864. போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.1 (ப. இ.) அடிமையாம் அனைத்துயிர்க்கும் என்றும் விட்டு நீங்காப் புகலிடமாயுள்ள திருவடியுணர்வைத் தமிழாகமவழிப் போற்றுகின்றேன். தனிப்பெரும் தலைவனாம் சிவபெருமான் திருவடியை உள்ளத்துணர்வால் ஓவாது தெளிகின்றேன். அதனால் திருவடியைக் கூடுதலாகிய சிவயோகத்துக்கு வேண்டத்தக்க சக்கரத்தையும் ஓங்காரமாம் ஒண்மறையினையும் அருளால் கூறுகின்றேன். எம்பிரானாரது கணிக்கப்படாத - பேசா எழுத்தாம் சிகரத்தினைக் கணியாது உணர்வால் ஓதுகின்றேன். அசபை என்பது செபிக்கப்படாதது என்று பொருள்படும். அதற்குரிய எழுத்தைப் பிறவாறு கூறுவாருமுளர். பேசும் எழுத்து 'வ' எனவும், பேசா எழுத்து 'சி' எனவும் கூறுவது தமிழாகம மரபு. 'சிவ' என இணைத்தே ஓதுவதியற்கை. அதனால் ஈண்டுச் 'சி' எனக் கூறப்பட்டது. (அ. சி.) அறை + ஓர் - சக்கரமும் பிரணவமும். அறை - வீடு. ஓரெழுத்து - அசபா மந்திரம். (1) 865. ஒரெழுத் தாலே உலகெங்குந் தானாகி ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய் மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே.2 (ப. இ.) ஓ என்னும் முன்னெழுத்தாலே உலகம் எல்லாம் கலப்பால் தானாகி; ஓ என்பதைப் பிரித்தால் அ + உ, என்று ஈரெழுத்தாகும். அவ்விரண்டும் சிவன் சிவை என்னும் இருபொருள்களைக் குறிக்கும். (எழுத்தின்படி பார்த்தால் அறிவோன் உடையாள் என்று பொருள் வரும்.) இவற்றை உயிர்க்குயிர் (பரமான்மா) உயிர் (சீவான்மா) எனவும் உரைப்பர். மூன்றெழுத்தாகிய அ + உ + ம் என்பன வற்றால் தோன்றுகின்ற பேரொளியினை, மாயையினைக் குறிக்கும் 'ம்' என்னும் எழுத்தால் (சலமகள் - நடப்பாற்றல் ம எனக் குறிக்கப்படுகின்றது.) உயிர்க்கு மயக்கம் வந்து பொருந்தும்.
1. அஞ்செழுத்தும். கொடிக்கவி, 4. 2. நித்தமா. சிவஞானசித்தியார், 2. 3 - 3.
|