(ப. இ.) நிலைத்த மெய்ப்பொருளாகிய சிவமும், நிலையாத பொய்ப் பொருளாகிய மாயாகாரிய உலகமும் திருவருட் கண்ணால் கண்டு, தூமாயை தூவாமாயை ஆகிய இரண்டிலும் மயங்குவதாகிய பற்றுக் கொள்ளாதுநின்று சுட்டுணர்வு சிற்றுணர்வாகிய சித்தும், உணர்வில்லதாகிய அசித்தும் தம்பால் தோன்றாமல் உள்ளம் கடந்த சுத்தமாகிய உண்மைச் சைவர்க்கு என்றும் யாண்டும் உள்ளதாகிய பெரும்பொருள் சிவன். அச் சிவன் அவர்கட்கு இறவாத இன்பவடிவாய் அன்பு செய்யப்படும் பொருளாவன். நேயம் - அன்பு செய்யப்படும் பொருள். சுத்தம் - தூமாயை; அசுத்தம் - தூவாமாயை. நீத்தல் - கடத்தல். பரம் - பெரும் பொருள். (அ. சி.) சத்து - மெய்ப்பொருள் ஆகிய பதி. அசத்து. மாயை. உடல். சதசத்து - உயிர். சித்து - ஞானம். அசித்து - அஞ்ஞானம். சுத்தம் - சுத்தமாயை. அசுத்தம் - அசுத்த மாயை. நித்தம் - நித்தியம். பரம் - சிவம். (2) 1396. கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம் முற்பத ஞான முறைமுறை நண்ணியே சொற்பத மேவித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.1 (ப. இ.) திருமுறை மெய்கண்ட நூல்களாகிய மெய்யுணர்வு நூல்களைத் திருவருள்சேர் நல்லாசான்பால் கற்று, அக் கல்விப் பேற்றான், எய்தக்கூடிய மெய்ப்பொருட் சேர்க்கையாம் சிவயோகத்துக்கு முன்னிலை சீலம் நோன்பு எனப்படுவன. அவ்விரண்டன் உணர்வும் பயிலப்பயிலக் கைகூடும். அம்முறையால் முன்னைப்பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளாகிய சிவத்தைப் பொருந்துவர். அதனால் மலமாயாகன்மங்களாகிய குற்றம் அறும். குற்றமறலும் தற்பரமாகிய விழுமிய முழுமுதற் சிவனைக் காண்பர். அங்ஙனம் கண்டுளோரே சைவசித்தாந்தர் எனப்படுவர். தொல்பதம் - பழம்பொருள். தற்பரம் - தானே பெரும் பொருள். (அ. சி.) கலைமன்னு மெய்யோகம் - நூல்களில் கண்ட உண்மையான யோகம். முற்பதம் - யோகத்திற்கு முந்திய சரியை, கிரியை. தொற்பதம் - தொல்பதம்; சமாதி நிலை. (3) 1397. வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர் பூதாந்த போதாந்த மாகப் புனஞ்செய்ய நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.2 (ப. இ .) மெய்ப்பொருளை ஐயம் திரிபற விளக்கும் சைவசித் தாந்தமே உண்மை வேதாந்த (2139) மாகும். சித்தாந்தப் பெருநெறி நிற்பாரே நாதமுடிவாகிய சிவனைக் கண்டு இன்புறுவோராவர்; பிறப்பிறப்பாகிய தடுமாற்றம் இலராவர்; பூதமுடிவும் அறிவு முடிவும் கைவரத் தத்துவ
1. புறச்சமய. சிவஞானசித்தியார், 8. 2 - 1. 2. சுவையொளி. திருக்குறள், 27.
|