2. தற்சிறப்புப் பாயிரம் 1. குரு பரம்பரை 129. நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே. (ப. இ.) நந்தியெம் பெருமான்பால் அவர்தம் திருவருட்டுணையால் பொருள்மறை கேட்டுப் போற்றி யொழுகும் மெய்கண்டார் நால்வராவர். மெய்கண்டார் - மாணவர். அவர் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ப. சிவயோக மாமுனிவர், பதஞ்சலியார் எனப்படும் பாம்புக்கால் முனிவர், வியாக்கிரபாதர் எனப்படும் புலிக்கால் முனிவர் ஆகிய மூவர். தன்னொடுங் கூட்டி எண்மர் என்றனர். நாதர் - செந்நெறிமுதல்வர்; சித்தாந்த ஆசிரியர். (அ. சி.) நந்திகள் நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர். மன்று தொழுத பதஞ்சலி - தில்லையில் நடம் கண்ட பதஞ்சலி முனிவர். (1) 130. நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம் நந்தி அருளாலே மூலனை1 நாடினோம் நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.2 (ப. இ.) தன்னை முழுமுதற் சிவனாம் தலைவற்கு அடிமையாக ஒப்புவித்தவர் அத் திருவருளால் நாதன் எனப்படுவர். அச் சிறப்புப் பெயரே பெயராக அழைக்கவும்படுவர். அந் நந்தியின் அருளாலே ஆ மேய்க்கும் மூலன் திருவுருவின்கண் புகுந்தேன். நந்தி அருளாவது நாட்டினில் என்செயுமெனின்? நந்தி வழிகாட்டவே நானிருந்து முந்திய தொண்டெலாம் முயல்கின்றேன். நந்தி - ஆலமர் செல்வன். வழிகாட்ட - சித்தாந்த நெறிகாட்ட. அடிமையாயினார்க்கு நந்தியருள் எல்லாம் இனிதினியற்றும் என்க. (அ. சி.) நந்தி . . . நாடினேன் - நந்தியெம்பெருமான் திருவருள் இறந்த மூலனுடைய தேகத்தில் புகுந்தேன். (2) 131. நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள் நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென நால்வருந் தேவராய்3 நாதரார்களே.
1. அந்தணர்தஞ், 12. திருமூலர், 11. 2. விளம்பிய. சிவஞான போதம், 5. 3. சம்பு. 12. திருமலைச் சிறப்பு, 19.
|