பக்கம் எண் :

59
 

(ப. இ.) சிவபெருமான் திருவெள்ளிமலையின் திருத்தாழ்வரையில் பத்திப் பெருக்காம் பேரன்பால் பாடிப் பரவிப் பணிந்து வழிபட்டுக் கொண்டிருந்த முனிவர் தேவர் முதலாயினார் பொருட்டு முப்பொருளுண்மை செப்பும் மெய்யுணர்வு நூலினை உரைத்தருளினர். அவர்கள் வீடுபேற்றையே வேண்டி வழிபட்டனர். அவர்கள் ஒன்று கூடியும் தனித்து நின்றும் வழிபட்டனர். இத்கைய நூலின் சிறந்த பயனை ஏனையோர் எளிதின் உணரார். ஒத்துடன் வேறாய் என்பதற்குச் சிவபெருமான் ஒன்றாய்ச் சேர்ந்து உடனாய்ச் செலுத்தி வேறாய்ச் செறிந்து உயிர்க்குயிராய் நிற்பன் என்றலும் ஒன்று. சேர்தல் செறிதல் செலுத்தல் ஒரு மூன்று, ஓரின் உயிர்க்குயிரின் பண்பு. மெய்யுணர்வு நூல்களே மெய்கண்ட நூல்களென்ப.

(6)

2. திருமூலர் தம் வரலாறு கூறுதல்
(மாணாக்கர்களுக்கு)

135. நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே.

(ப. இ.) ஆலமர் செல்வனாம் நந்தியெங் கடவுளின் திருவடியினைத் தலைமேற் கொண்டு, கொண்டவாறே இறுப்பு மெய்யாம் புத்தியின்கண் நிலைபெறச் செய்து செந்தமிழ்ப் போற்றித்தொடர் புகன்று வழிபட்டு வளரும் மதியினைப் புனைந்த திருச்சடையினை உடைய சிவபெருமானை நாடொறும் உள்ளத்தின்கண்ணே நாடி உயிர்க்கு உறுதி பயக்கும் செந்தமிழ்ச்சிவாகமம் மொழியலுற்றேன் என்பதாம். ஆகமம் - இறைவன் நூல். ஆவி நிறைவாம் முறைநூல் எனவும் படும். ஆ - ஆவி. கமம் - நிறைவு. புந்தி - அறிவு. சிந்தை செய்து - இடையறாது நாடி ஆகமம் - தமிழாகமம். ஆகமம்: ஆவியின் அறிவை நிறைவிக்கும் நூல்.

(1)

136. செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே.

(ப. இ.) ஆருயிர்கள்மாட்டுச் சிவப்பண்பு நிறைவதற்காம் வழிவகை ஆக்கும் கருவிநூல் சிவாகமம் எனப்படும். அம்முறையானே அருளிச் செய்தவன் ஆலமர் செல்வனாகிய நந்தியெம் பெருமான். அவன் திருவடிப்புணை கொண்டு அப் பெயரே பெற்றுத் திகழுமாறு என்னைக் கொண்டும் இயற்றியருளினன். 'நள்ளிருளிலும் நட்டம் நாதன் பயின்றாடலின்' பொன்னம்பலமும் ஆருயிர்களின் நெஞ்சத் தாமரையும் தப்பிலாமன்று எனத் தமிழகச் செந்நெறிச் சான்றோர் திருவருளின் திறத்தால் தொன்மையே நன்மையாக மொழிந்தனர். அத் திருக்